கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின.
வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கர்நாடகம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்கு தகுந்தவாறு வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் என்பதால் தேர்தல் முடிவுகள் பகல் 1 மணிக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதில் வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும்.




