“அரசின் திட்டப் பலன்கள் நூறு சதவீதம்  அனைவரையும் சென்றடைய வேண்டும்..!” பிரமர் மோடி

"அரசின் திட்டப்பலன்கள் நூறு சதவீதம்  அனைவரையும் சென்றடைய வேண்டும்" என்று குஜராத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

0
285
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலை மற்றும் போக்குவரத்து, சுரங்கங்கள், கனிமங்கள் ஆகிய துறைகளில் ரூ.2450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

பிரதமரின் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் ரூ.1950 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட19,000 வீடுகளின் கிரஹப்பிரவேசத்தில் பங்கேற்றதுடன், பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார் பிரதமர். மேலும், காணொலி காட்சி வாயிலாக பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

விழாவில் பேசிய பிரதமர், பயனாளிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாபெரும் தியாகத்தின் மூலம் இந்த தேசம் கட்டி எழுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு குஜராத்தில் அமைந்த புதிய அரசின் கீழ்  மாநிலத்தின் வளர்ச்சி வேகம் எடுத்திருப்பது திருப்தி அளிப்பதாகவும் கூறினார். குஜராத்தின் மாநில பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒடுக்கப்பட்டவர்களை முன்னிறுத்தி நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

25 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம், 2 லட்சம் தாய்மார்களுக்கு பிரதமரின் மகப்பேறு நிதியுதவி, 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நவீன உள்கட்டமைப்பு வசதிக்கான பணிகள் ஆகிய முனைப்பான நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர்,  இவை இரட்டை என்ஜின் குஜராத் அரசின் பணிகள், இரட்டை வேகம் எடுத்திருப்பதை உறுதிசெய்வதாகக் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் எதிர்பாராத வளர்ச்சியை மக்கள் அனுபவித்து வருவதாகவும், ஒரு காலத்தில் அடிப்படை வசதிகளை பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட்ட குடிமக்கள், தற்போது அந்த சிக்கலில் இருந்து மீண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அரசின் திட்டப்பலன்கள் நூறு சதவீதம்  அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தப்படுவதாகவும், வளர்ச்சி என்பது எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். ஊழல் மற்றும் பாகுபாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அணுகுமுறை என்று குறிப்பிட்ட பிரதமர், எங்கும் பாகுபாடு இல்லை என்ற நிலையே மதச்சார்பின்மையின் உண்மையான அடையாளம் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

சமூக நீதி நிலைநாட்டப்படும் போது, அரசு திட்டங்களின் பயன்கள் சமுதாயத்தின் ஒவ்வொருவரையும் சென்றடையும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டு 32,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர்,   அடிப்படைத் தேவைகளுக்கான தேடல் குறைந்திருப்பதால், ஏழை மக்களின் தன்னம்பிக்கை உத்வேகமடைந்திருப்பதாக தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறையில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினரை ஏமாற்றும் மோசடியை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும், அவ்வாறு வீடு வாங்கும் போது நடுத்தர வர்க்கத்தினருக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் ரெரா சட்டத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.  குஜராத் அரசின் பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினர் வீட்டு கடனுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும், 5 லட்சம் குடும்பங்களுக்கு 11,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் அடுத்தடுத்த இலக்கை நோக்கி வேகமெடுக்கும் எனவும், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டே குஜராத்தின் பல நகரங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும், அம்ருத்  இயக்கத்தின் கீழ் 500 நகரங்களில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதையும், இதில் 100 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

நகரமயமாக்கலை பொறுத்தவரை எளிமையான வாழ்க்கை முறை  மற்றும் தரமான வாழ்க்கை  ஆகிய இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  செல்ல அதிக நேரம் செலவிடுவதைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது 20 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு 250 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, கடந்த 9 ஆண்டுகளில் 600 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இரட்டை நகரங்கள் என வர்ணிக்கப்படும் அகமதாபாத்-காந்தி நகர் ஆகிய நகரங்கள் இன்றைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டிருப்பதை  சுட்டிக்காட்டிய பிரதமர், குஜராத்தில் பல்வேறு நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதையும் நினைவுகூர்ந்தார்.

எனவே, வளர்ச்சியின் வேகத்தை அதே பாதையில் நிர்வகிக்க நம் அனைவரும் முன்வருவோம் என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி நாம் அனைவரும் முயற்சி செய்தால் அமிர்த காலத்திற்கென உருவாக்கியுள்ள இலக்குகளை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் சி ஆர் பாட்டீல்,  அம்மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்