கோவில்களில் உள்ள தங்க இருப்புகள் பணமாக்கப்பட உள்ளதாக பரவும் தகவல்கள் குறித்து, மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவில்களில் உள்ள தங்க இருப்புகளுக்கு மாற்றாக தங்கப் பத்திரங்களை வெளியிடுவது அல்லது கோவில் தங்க இருப்புகளை பணமாக்குவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிப்பது போன்றவற்றுக்காக மத்திய அரசு திட்டமிடுகிறது என்று சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோவில் அறக்கட்டளைகள் அல்லது மதஅமைப்புகளின் பொறுப்பில் உள்ள தங்கத்தை பணமாக்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிடுகிறது என்பது எந்த அடிப்படையும் இல்லாத முற்றிலும் தவறான வதந்தியாகும்.

கோவில் கோபுரங்கள், கதவுகள் அல்லது இதர கோவில் அமைப்புகளின் மீதுள்ள தங்கத்தகடுகளை இந்தியாவின் தங்க இருப்புகளாக கருதுவதாக பரவும் செய்திகளும் முற்றிலும் அடிப்படையற்ற தவறான தகவல் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தெளிவுப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகிறது.
எனவே அனைத்து குடிமக்களும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்துகிறது. கொள்கை முடிவுகள் அல்லது அரசுத்திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்திகள், அரசு இணையதளங்கள் மற்றும் பொது தகவல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும்.

