ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ச.ஜோசப் விஜய், விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் பயிர்கடன் பெற்ற விவசாயிகள் கடனை திருப்ப செலுத்த வேண்டிய காலமாக உள்ளதால் மாநில அரசு உடனடியாக கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச்செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன் ஆகியோர் கூட்டாக பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை:
பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்திய நாட்டு விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் மிக முக்கியமானது, விவசாயிகள் உற்பத்தி செய்திடும் அனைத்து விளைப்பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுகளோடு 50 சதம் கூடுதலாக சேர்த்து (சி2+50) அடிப்படையில் வழங்குவோம் எனவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பின்பும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
வேளாண் உற்பத்தி செலவுகள் உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு ரசாயன உரங்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. 50 கிலோ பாக்டம்பாஷ் 20:20: 400 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 2150 க்கு விற்கப்படுகிறது. பொட்டாஷ் 1975 ரூபாயிலிருந்து 275 ரூபாய் உயர்ந்து 2150 ரூபாயாகவும், காம்ப்ளக்ஸ் 10:26:26, 2200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் உயர்த்தப்பட்டு 2450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அம்மோனியா சல்பேட் 1200 லிருந்து 200 ரூபாய் உயர்த்தப்பட்டு 1400க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம் இதோடு நிற்கப்போவதில்லையாம் அடுத்தடுத்த மாதங்களில் மேலும் ரசாயன உயரங்களின் விலை உயரும் என செய்திகள் வருகின்றது. ஒன்றிய அரசின் தவறான வேளாண் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் கடுமையான விலை உயர்வு மேலும் ஒரு இடியாகும். எனவே, ஒன்றிய அரசின் உரவிலை உயர்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக உயர்த்தப்பட்ட ரசாயன உரங்களின் விலையை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்கடனை தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்திருந்தனர். ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ச.ஜோசப் விஜய், விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் பயிர்கடன் பெற்ற விவசாயிகள் கடனை திருப்ப செலுத்த வேண்டிய காலமாக உள்ளதால் மாநில அரசு உடனடியாக கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மாநில அரசை வலியுறுத்துகிறோம்.
ஒன்றிய அரசின் உரவிலை உயர்வை உடன் ரத்து செய்யக்கோரியும், மாநில அரசு கூட்டுறவு பயிர்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், எதிர்வரும் 26.05.2026 அன்று மாநிலம் முழுவதும் இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

