spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியாதேர்தல் ஜனநாயகத்தின் பாதுகாவலர் யார் ? எச்சரிக்கை ரிப்போர்ட்

    தேர்தல் ஜனநாயகத்தின் பாதுகாவலர் யார் ? எச்சரிக்கை ரிப்போர்ட்

    ’’பிரபலமான திரை நட்சத்திரங்களைத் தவறாக சித்தரிக்கும் வீடியோக்கள் ஒரே இரவில் சில இலட்சம் பார்வைகளைக் கடந்து பரபரப்பாகிறது. மறுநாள் வெளியாகும் மறுப்புச் செய்தி சிறு கவனத்தில் நீர்த்துப் போகிறது. இதையே தேர்தல் காலங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.’’ என்கிறார் கட்டுரை ஆசிரியர் தமிழ் வேந்தன்.

    2023 நவம்பர் மாதம்.

    தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த சமயம். வாக்களிக்கும் நாளில் சமூக ஊடகங்களில் ஒரு குறுவீடியோ வேகமாகப் பரவியது. ஆளுங்கட்சியைச் சார்ந்த ஒரு தலைவர் மாற்றுக் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதாக காட்டும் வீடியோ. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளினால் உடனடியாக வைரலானது. ஆனால் அது தவறான உள்ளடக்கம் கொண்ட வீடியோ. செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட Deepfake வீடியோ. அது உண்டாக்கிய சேதத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

    இது ஒற்றைச் சம்பவமாக நிற்கவில்லை. இந்தியாவின் புதிய தேர்தல் யதார்த்தமாகி விட்டது.
    INDIA-POLITICS-TELANGANA-ELECTION
    2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவை. 80 சதவீத முதல் முறை வாக்காளர்கள், தங்களின் முதன்மைச் செய்தி மூலங்களாக சமூக ஊடகங்களை மட்டுமே நம்புவதாகவும், அவற்றின் மூலமே தினசரி செய்திகளை அறிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
    உலகப் பொருளாதார மன்றத்தின் 2024-ம் ஆண்டு அறிக்கையில் தவறான தகவல் பரவல் ஆபத்தில் இந்தியாவிற்கு உலகின் முதல் இடம். அதுவும் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக.
    2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்துள்ளது. இதை மிகச் சிறந்த சந்தை வாய்ப்பாகவும் கருதலாம். சவாலாகவும் கருதலாம்.
    World's Largest Democratic Election Concludes In India
    நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்யறிவு தொழில்நுட்ப வளர்ச்சியும், தாக்கமும் ஆய்வுக்கு உரியன. தமிழ்நாட்டின் அனைத்து முக்கியக் கட்சிகளும் தங்களுக்கெனத் தனித்த ‘டிஜிட்டல் வார் ரூம்களை’ அமைத்துச் செயல்பட்டன. மறைந்த அரசியல் தலைவர்களின் உருவமும், குரலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டு பரப்புரைகளில் பயன்படுத்தப்பட்டன. சுவர் ஓவிய விளம்பரங்களை விட சமூக ஊடக விளம்பரங்களே அதிகம் தென்பட்டன. பெரும்பாலான இளம் வாக்காளர்களும், முதல் முறை வாக்காளர்களும் ரீல்ஸ், மீம்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றின் மூலமே தேர்தல் பரப்புரைகளையும், கட்சிகளின் வாக்குறுதிகளையும் அறிந்தனர். சில குறிப்பிட்ட வேட்பாளர்களின் தகுதி, சொத்து விபரங்கள் பல்லாயிரம் மக்களை எளிதாகச் சென்றடைந்து விவாதப் பொருளாகின.
    வாட்ஸப் யுனிவர்சிட்டி என்றொரு பதம் இந்தியாவில் மிகப் பிரபலம். பெரும்பாலும் நகைச்சுவையாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் தாக்கங்கள் சிரிப்பூட்டுபவை அல்ல. இன்றைய தேதிக்கு முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒவ்வொரு மட்டத்திலும் பல்வேறு வாட்ஸப் குழுக்களை நிர்வகித்து வருகின்றன. வாட்ஸப் குழுக்களுக்குள், குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பரப்பப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறியும் முன் அவை வைரலாகி விடுகின்றன.
    பிரபலமான திரை நட்சத்திரங்களைத் தவறாக சித்தரிக்கும் வீடியோக்கள் ஒரே இரவில் சில இலட்சம் பார்வைகளைக் கடந்து பரபரப்பாகிறது. மறுநாள் வெளியாகும் மறுப்புச் செய்தி சிறு கவனத்தில் நீர்த்துப் போகிறது. இதையே தேர்தல் காலங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
    குறிப்பிட்ட கட்சியை அவதூறாகச் சொல்லி வெளியிடப்படும் காணொளி உடனடியாக ட்ரெண்ட் ஆகிவிடும். அதற்கான மறுப்புச் செய்தி, வந்த சுவடு இன்றி மறைந்து போகும். சமூக ஊடகங்கள் வழியே பரவும் வெறுப்புப் பிரசாரங்களினால் சமூகத்தில் குழப்பமும், வன்முறையும் அதிகரிக்கிறது. தேர்தல் காலங்களில் இது உச்சம் பெறுகிறது.
    தவறான செய்திகளை சமூக ஊடகங்களின் வழியே பரப்புவதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அல்காரிதம், என்கேஜ்மென்ட் (Engagement) மற்றும் எக்கோ சேம்பர் (Echo Chamber).
    The Impact and Concerns of Social Media | by Wu Wu | Medium
    சமூக ஊடகங்களின் அல்காரிதங்கள் பயனர்களுக்கு அவர்கள் விரும்பும் கருத்துக்களை மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டுகின்றன. இது அதிகப்படியான திரை நேரத்தை கோரும் உத்தியாகவே பயன்படுகிறது. எக்கோ சேம்பர் என்ற பதமும் சமீபத்தில் அதிகம் விவாதப் பொருளானது. ஒரு வெற்று அறையில் நாம் பேசினால் நம்முடைய குரலே திரும்பவும் எதிரொலிப்பதைப் போல, சமூக ஊடகங்களில் நம்முடைய சொந்தக் கருத்துக்களே நமக்கு வெவ்வேறு வடிவங்களில் எதிரொலிக்கும் நிகழ்வுதான் இது. ஒரு பயனரின் கருத்துக்கு மாறான பதிவுகளை அல்காரிதம் மெல்ல மெல்ல அவரது பார்வையில் இருந்து மறைத்துவிடும். இதன் விளைவாக, அவரைச் சுற்றியுள்ள உலகம் முழுவதும் அவரைப் போலவே சிந்திக்கிறது என்கிற மாயை உருவாகிறது. இதனால் மாற்றுக்கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவமும், சகிப்புத்தன்மையும் குறைகிறது.
    அதிகப்படியான என்கேஜ்மென்ட் உடைய உள்ளடக்கங்கள் பல்லாயிரம் மக்களின் உள்ளங்கைகளை சில நிமிடங்களில் அடைகின்றன. பார்த்தவுடனே கோபமூட்டும், பயமுறுத்தும் உள்ளடக்கங்கள் விரைவாகப் பரவுகின்றன.
    பிரபலமான செய்தி நிறுவனங்களின் இலச்சினை, வண்ணம், வடிவமைப்பு, எழுத்துரு போன்றவற்றை முழுமையாகப் பிரதியெடுத்து அதில் போலியான அல்லது தவறான செய்தியை நிரப்பிப் பகிரப்பப்படும் பதிவுகள் சமீபமாகப் பெருகி வருகின்றன. சமூக ஊடகங்களில் அரசியல் குழப்பங்களை விளைவிக்கவும், பொதுமக்களை தவறாக வழிநடத்தவும் இது ஒரு உத்தியாகவே கடைபிடிக்கப்படுகிறது.
    Who will win Tamil Nadu Assembly elections? This is what pre-poll surveys say - The Week
    சமூக ஊடகங்களால் நன்மையே இல்லையா என்றால் நாணயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கலாம். முன்பு எப்போதும் இல்லாத வகையில் வாக்காளர்கள் தம் தொகுதியின் வேட்பாளர்கள் குறித்து அறிய முடிகிறது. யாரென்றே அறியப்படாதவர்களின் அரசியல் கருத்துக்களும் பல்லாயிரம் பேரை உடனடியாக சென்று சேர்கிறது. வாக்காளர்களின் விழிப்புணர்வுக்கு ஆதாரமாய் செயல்படுகின்றது.

    எத்தனை நன்மைகள் சொன்னாலும் ஒன்றை ஒப்புக்கொள்ளவே வேண்டும். விஷம் வேகமாகப் பரவுகிறது. மருந்து நிதானமாகவேப் பயனளிக்கிறது..”

    சமூக ஊடகங்கள் வழியே போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பைப் பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தேர்தல் ஆணையமும் டிஜிட்டல் பிரசாரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.
    காண்பதையும், படிப்பதையும் உடனே நம்பாமல், ஆராய்ந்து செயல்படும் விழிப்பு மிக்க வாக்காளர்களே தேர்தல் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பதையும் புரிந்து நடக்க நாமும் முயல்வோம்.
    தமிழ் வேந்தன் – கட்டுரை ஆசிரியர்
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments