மேற்கு ஆசிய மோதல் தொடரும் பின்னணியில், தற்போதைய நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளால் இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்டு வரும் உலகளாவிய நிலைமை மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கம் அளித்தார். வேளாண்மை, உரங்கள், உணவுப் பாதுகாப்பு, பெட்ரோலியம், மின்சாரம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம், நிதி, விநியோகத் தொடர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்துத் துறைகள் போன்றவற்றில் எதிர்பார்க்கப்படும் தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த பருப் பொருளாதாரச் சூழல் மற்றும் கூடுதலாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல், உலகப் பொருளாதாரத்தில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும், இந்தியாவின் மீதான அதன் விளைவும் மதிப்பிடப்பட்டு, உடனடி மற்றும் நீண்ட காலத் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள், பெட்ரோ ரசாயனங்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்குத் தேவையான இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேபோல், இந்தியப் பொருட்களை ஊக்குவிப்பதற்காக புதிய ஏற்றுமதி இலக்குகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.
முழுமையான அரசு அணுகுமுறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கப் பிரதமர் உத்தரவிட்டார். துறைசார் குழுக்கள் அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்துப் பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்த மோதல் மாறிக்கொண்டிருக்கும் ஒன்று என்றும், இதனால் உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார். இத்தகைய சூழ்நிலையில், இந்த மோதலின் தாக்கத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். குடிமக்களுக்கு சிரமம் குறைவாக இருப்பதை உறுதிசெய்ய, அரசின் அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களின் கள்ளச்சந்தை மற்றும் பதுக்கல் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய, மாநில அரசுகளுடன் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்படுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

