Madras Murasu

திருநவேலி குரல்கள் … எழுத்தாளர் சுகா

திருநவேலி குரல்கள் …
வழக்கம் போல எனது திருநவேலி வருகையை பாலு சிறப்பாக்கினான். காது கேளாத, வாய் பேச முடியாத பாலு தனது இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் துண்டு விரித்து என்னை அமரச் செய்து ஓட்டிக் கொண்டு ஜங்ஷன் அரசன் பேக்கரிக்கு அழைத்துச் சென்றான். அவன் சொல்லாமலேயே வண்டி எப்படியும் அங்குதான் செல்லும் என்பதால் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆளுக்கு ‘பப்பாதி பப்ஸ்’ சொல்லி டீ வரவழைத்தான். அரசன் ஊழியர்கள் அனைவரும் அவனது நண்பர்கள். ‘அண்ணன் ஊருக்கு வந்து ஆறேளு மாசமாச்சு’ என்று என்னைக் காட்டி சொல்லிக்கொண்டே இருந்தான். பாலுவின் சைகைமொழி அநேகமாக திருநெல்வேலியில் அவனுக்கு அறிமுகமான அனைவருக்கும் தெரிந்திருந்தது.
‘அப்பப்பம் ஊருக்கு வாருங்கண்ணே! பாலு வருத்தப்படுதாம்லா’ என்றார் அரசன் ஊழியர்.
நெல்லையப்பர் கோயிலுக்குள் நுழையும்போதே எனது தோள்பையை தான் வாங்கி தனது தோளில் போட்டுக் கொண்டான். காந்திமதி அம்மன் சன்னதிக்கு முன் உள்ள கொடிமரத்தை வணங்கச் செய்து, இடதுபக்க பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு, உள்ளே அனுமதிச் சீட்டு வழங்குபவரிடம் ‘அண்ணன் வந்திருக்காங்க’ என்று சொல்லி காந்திமதி அம்மைக்கு அருகில் என்னைக் கொண்டு நிறுத்தினான். கண்களை மூடி ‘வடிவுடை காந்திமதித்தாயே’ என்று வணங்கினேன். தீபாராதனை வணங்கி, குங்குமம் பெற்றுக் கொண்டு வெளிப்பிரகாரம் சுற்றும்போது ஒவ்வொரு இடமாகக் காட்டிச் சொல்லிக் கொண்டே வந்தான். ஆறுமுகநயினார் சன்னதிக்கு அருகில் உள்ள பெரிய பிள்ளையாரை வணங்கி விட்டு, மேல கோபுர வாசல் வழியாக நரசிங்க பெருமாளை தரிசிக்க அழைத்துச் சென்றார். அங்கும் விளக்கம் தொடர்ந்தது. மீண்டும் நெல்லையப்பர் சன்னதிக்குள் நுழைந்து பைரவரை வணங்கி மாக்காளை தாண்டி நெல்லையப்பர் சன்னதிக்குள் நுழைந்தோம். அதற்கு முன் ராவணேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்றேன்.
‘நாந்தான் உனக்கு சொல்லணும். நீ என்ன எனக்கு சொல்றது?’ என்பதாக இருந்தது அவன் முறைப்பு.
உள்ளே நெல்லையப்பர் முன் சிவபுராணம் சொல்லி முடிக்கவும் தீபாராதனை காட்டவும் சரியாக இருந்தது. நான் இதுவரை பார்த்திராத அர்ச்சக இளைஞர் வந்து தீபாராதனை தட்டை காண்பித்தார். அவரிடம் பாலு ஏதோ சொல்ல, திருநீறு வாங்க கை நீட்டிய எனது நெற்றியில் திருநீறு பூசியபடி, ‘இவன் என் க்ளாஸ்மேட்டு. நீங்க முக்கியமான ஆளுன்னு சொல்லுதான். யாருன்னு புடிபடல’ என்றார். நான் இன்னார் எனச் சொல்லவும் கையை உதறியபடி ‘நல்லா இருக்கேளாண்ணே! எப்பம் வந்திய? போட்டோல பாத்திருக்கேன். நேர்ல வேற மாதிரி இருக்கிய. எத்தன நாள் இருப்பிய?’ என்றார்.
வெளிப்பிரகாரம் சுற்றும் போதும் பாலுவிடமிருந்து ஏகப்பட்ட விளக்கம். ‘இங்கே நின்னு கும்பிடு. இந்த படில நில்லு’.
‘எல! நான் உன்னை விட மூத்தவன். பொறந்ததிலேருந்தே நெல்லேப்பர் கோயிலுக்கு வந்துக்கிட்டு இருக்கேன். எனக்கு ஏம்ல இத்தன வெளக்கம்?’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். மனதின் குறிப்பை முகத்திலோ, உடல்மொழியிலோ காட்டிக் கொள்ளவில்லை. சிறு சமிக்ஞையைக் கூட கண்டுபிடித்து விடுவான், பாலு.
அம்மன் சன்னதி மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அன்னதானத்துக்குக் காத்திருந்த சந்நியாசிகள், முதியவர்களின் தோற்றம் மனதை தொந்தரவு செய்தது. ஒரு சந்நியாசிக்கு பாலுவைத் தெரிந்திருந்தது. இவனது சைகைமொழியைத் துல்லியமாக அறிந்திருந்தார். அவரைக் கடந்து செல்லும் போது ‘அப்பப்பம் ஊருக்கு வந்து போங்க. தம்பியாபிள்ள வருத்தப்படுதாருல்லா!’ என்றார். அரசன் பேக்கரி ஊழியரின் குரலை ஒத்திருந்தது, அன்னதானத்துக்குக் காத்திருந்த சந்நியாசியின் குரல்
(திரு சுகா அவர்களின் முகநூல் பதிவு :  நன்றி – எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சுகா, நெல்லை வட்டார வழக்கையும் எளிய உணர்வுகளையும் தன் படைப்புகளில் கொண்டுவரும் பாலுமகேந்திராவின் மாணவர் ஆவார். ‘மூங்கில் மூச்சு’, ‘வடக்குரத வீதி’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், ‘படித்துறை’ படத்தை இயக்கியதோடு, ‘தூங்காவனம்’, ‘பாபநாசம்’, ‘அசுரன்’ போன்ற முக்கியத் திரைப்படங்களுக்கு நெல்லைத் தமிழ் வசனப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.)
Scroll to Top