Madras Murasu

100 ஆண்டுகால யுபிஎஸ்சி: தகுதியின் அடையாளம், தேசத்தின் வழிகாட்டி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 அக்டோபர் 1 அன்று 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 1926 அக்டோபர் 1 அன்று இந்தியாவின் முதல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆலோசனை அமைப்பாக செயல்பட்ட இந்த அமைப்பு, நூற்றாண்டு காலத்தில் கட்டமைப்பு, பொறுப்புகளில் மாற்றம் கண்டு, இன்று சுதந்திரமான அரசியலமைப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அரசுப் பணி நியமனம் சிறப்புரிமை அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற கொள்கை 1855-ல் முறையான வடிவம் பெற்றது. அந்த ஆண்டில் இந்திய குடிமைப் பணி (ஐசிஎஸ்) தேர்வு முறை லண்டனில் தொடங்கப்பட்டது. 1863-ல் சத்தியேந்திரநாத் தாகூர் இத்தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியரானார். இந்திய அரசாங்கச் சட்டம், 1919 அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை ஏற்படுத்த வழிவகுத்தது. 1922-ல் ஐசிஎஸ் தேர்வு இந்தியாவில் முதல் முறையாக அலகாபாத்தில் நடைபெற்றது. 1926-ல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் முறையாக தேற்றுவிக்கப்பட்டது.

1949 ஆகஸ்ட் 22 அன்று டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் தொடர்பான பிரிவுகளை அரசியல் நிர்ணய சபையில் முன்வைத்தார். இவை அரசியலமைப்பின் பகுதி XIV-ல் 315 முதல் 323 வரையிலான பிரிவுகளில் இடம்பெற்றன. ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமித்தல், உறுப்பினர்களை நீக்குவதற்கான நடைமுறைகள், தேர்வாணையத்தின் பணிகள், செலவினங்கள், ஆண்டு அறிக்கை ஆகியவற்றுக்கு இப்பிரிவுகள் அரசியலமைப்பு அடித்தளத்தை வழங்குகின்றன.

யுபிஎஸ்சி குடிமைப் பணிகள், இந்திய வனப் பணி, பொறியியல் பணிகள், ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள், தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை பணிகள், மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான உதவி கமாண்டண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அமைச்சகங்கள், துறைகள் கோரும் சிறப்புப் பணியிடங்களுக்கான நேர்காணல்கள், ஆட்சேர்ப்புத் தேர்வுகளையும் நடத்துகிறது. பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு விதிகள், ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்குகிறது. 2023-24-ல் பதவி உயர்வுக்காக 24,581 அதிகாரிகளின் பதிவுகள் பரிசீலிக்கப்பட்டதுடன், 532 அதிகாரிகள் அகில இந்தியப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்.

1950-ல் ஒருங்கிணைந்த அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமாக மாற்றப்பட்டது. 1979-ல் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களைக் கொண்ட குடிமைப் பணித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. 1989-ல் ஓஎம்ஆர் (OMR) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000-ல் இணையவழி ஆட்சேர்ப்பு விண்ணப்ப முறை தொடங்கியது. 2011-ல் குடிமைப் பணித் திறனறித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. 2021-ல் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வில் முதன்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

1950-51-ல் 42,727 ஆக இருந்த தேர்வுகள், தேர்வு அடிப்படையிலான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் 2022-23-ல் 45,10,044 ஆக உயர்ந்துள்ளன. தேர்வு மையங்களின் எண்ணிக்கை 1950-ல் 8 ஆக இருந்த நிலையில் 2026-ல் 86 ஆக அதிகரித்துள்ளது. 2025 குடிமைப் பணித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 958 பேரில், 299 பேர் பெண்களாவர்.

இப்போது, டாக்டர் அஜய் குமார் தலைமையில் 8 உறுப்பினர்களுடன் தேர்வாணையம் செயல்பட்டுவருகிறது. தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, அனைத்துத் தரப்பினரையும் சார்ந்த தேர்வு முறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு தேர்வு நடைமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தில், தகுதியை அங்கீகரித்தல், நீதியை நிலைநிறுத்துதல், வாய்ப்புகளை பரந்த அளவில் கொண்டு சேர்த்தல் ஆகிய பொறுப்புகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Scroll to Top