ஆண் அரசு ஊழியர்களுக்கும் 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தக் காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய் மற்றும் குழந்தையின் நலனை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளது. அதேபோன்று, ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்குவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், குழந்தையின் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் உதவும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எப்போது பயன்படுத்தலாம்?
இதனைத் தொடர்ந்து, திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் தங்களது மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருந்து கவனித்துக் கொள்ள ஏதுவாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுப்பை,
-
குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து பயன்படுத்தலாம்.
-
அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் மற்றும் குழந்தையின் நலனில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
