கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கிறிஸ்தவக் குடும்பம், இந்து மதத்துக்கு மாறுவதற்கு அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
கொட்டாரக்கரை மகா கணபதி கோயிலில் இந்து மதத்துக்கு மாறுவதற்கான சடங்குகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, அந்தக் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோயில் நிர்வாகம் அனுமதி மறுப்பு!
கொல்லம் மாவட்டம் புனலூரைச் சேர்ந்த சுர்வேலட்சுமி எஸ். என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்கள் குடும்பம் CSI கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தது என்றும், இந்து மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக கடந்த 2026 ஜூன் 24ஆம் தேதி கொட்டாரக்கரை மகா கணபதி கோயிலின் நிர்வாக அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஆனால், மதமாற்றச் சடங்குகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக, கோயில் ஆலோசனைக் குழுவின் ஆட்சேபனைக் கடிதத்தைக் குறிப்பிட்டு, அந்த விண்ணப்பம் தேவசம் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஆணையருக்கு அனுப்பப்பட்ட போதிலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் விருப்பம்; எங்கள் முடிவு!
இதுகுறித்து மனுதாரர் கூறுகையில், “நாங்கள் கிறிஸ்தவ மதத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், காலப்போக்கில் எங்களுடைய மூதாதையர் மதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மீண்டும் எங்களுடைய பாரம்பரிய மதத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளோம். இது முழுக்க முழுக்க எங்களுடைய சொந்த முடிவு” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மதமாற்றச் சடங்குக்கு கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால், அது தேவசம் வாரியத்தின் நற்பெயரைப் பாதிக்கக்கூடும் என்று கோயில் நிர்வாக அதிகாரி எஸ். வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
தங்களது மத நம்பிக்கை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இந்து மதத்துக்குத் திரும்ப விரும்பும் குடும்பத்தின் கோரிக்கைக்கு அனுமதி கிடைக்குமா என்பது தற்போது நீதிமன்றத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.
