Madras Murasu

துணைவேந்தர் நியமனத்தில் மீண்டும் அதிகார மோதலா? ஆளுநர் அர்லேகர் கடிதம்

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார்.

துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 25ஆம் தேதி தேதியிடப்பட்ட இந்தக் கடிதத்தின் விவரங்களை லோக் பவன் நவம்பர் 26ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை!

தமிழகத்தில் 14 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேரத் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பல்கலைக்கழகங்களின் நிர்வாகப் பணிகள், தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறை பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகம் மற்றும் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதுமானதாக இல்லை என்று ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துணைவேந்தர்கள் இல்லாததால் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதாகவும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது பட்டச் சான்றிதழ்களுக்காகக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

4 பேர் கொண்ட தேர்வுக் குழு – ஆளுநர் பரிந்துரை!

துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவில் நான்கு பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று ஆளுநர் முன்மொழிந்துள்ளார்.

  1. ஆளுநர் (வேந்தர்) தரப்பில் ஒரு பிரதிநிதி.

  2. பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பில் ஒரு பிரதிநிதி.

  3. UGC தலைவர் சார்பில் ஒரு பிரதிநிதி.

  4. தமிழக அரசு சார்பில் ஒரு பிரதிநிதி.

இந்தக் குழுவில் இடம்பெறுபவர்கள் நேர்மை, தொழில்முறைத் தகுதி கொண்ட சிறந்த கல்வியாளர்களாகவும் நிபுணர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குழு ஒருமனதாக மூன்று தகுதியான நபர்களைத் தேர்வுப் பட்டியலில் சேர்த்து, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

இரண்டு மாதங்களில் தேர்வு நடைமுறை!

துணைவேந்தர் பதவிக்கான தேர்வு நடைமுறையை விரைவுபடுத்தவும் ஆளுநர் காலக்கெடு பரிந்துரைத்துள்ளார்.

  • காலிப் பணியிடம் ஏற்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்வு நடைமுறையைத் தொடங்க வேண்டும்.

  • தேர்வுக் குழு அமைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

  • அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குள் விண்ணப்பப் பரிசீலனை மற்றும் நேர்காணலை முடிக்க வேண்டும்.

  • மூன்று தகுதியான நபர்களை ஒருமனதாகத் தேர்வுப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

UGC பிரதிநிதி விவகாரத்தில் தொடரும் சர்ச்சை!

2018ஆம் ஆண்டு UGC விதிமுறைகளின் 7.3(ii) பிரிவின்படி, துணைவேந்தர் தேர்வுக் குழுவில் UGC தலைவர் பரிந்துரைக்கும் பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது ஆளுநர் அர்லேகரும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதற்கிடையே, துணைவேந்தர் நியமன அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்தங்கள் மற்றும் அவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு பரஸ்பர ஆலோசனை மூலம் சட்டப்பூர்வமான தீர்வு காண வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நீடிக்கும் துணைவேந்தர் காலியிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநரின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்குமா? அல்லது புதிய நடைமுறையை முன்வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Scroll to Top