Madras Murasu

ஜாகீர் நாயக் IRF அமைப்பின் நிதி உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (Islamic Research Foundation – IRF) அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் அதிகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கான அரசாணை நவம்பர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), 1967-ன் பிரிவு 42-ன் கீழ் இந்த அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி மற்றும் சொத்துகளைக் கட்டுப்படுத்த அதிகாரம்!

UAPA சட்டத்தின் 7 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இனி மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் IRF அமைப்பு தொடர்பாகப் பயன்படுத்தலாம்.

இதன்படி, UAPA பிரிவு 7-ன் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நிதி, வங்கிக் கணக்குகள், பத்திரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.

பிரிவு 8-ன் கீழ் அந்த அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கருதப்படும் வீடுகள், கட்டடங்கள் மற்றும் பிற வளாகங்களை அறிவித்து, அவற்றின் பயன்பாடு மற்றும் அணுகலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதன் மூலம் IRF அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநில அரசுகள் நேரடியாகச் செயல்படுவதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் தடை!

ஜாகீர் நாயக்கால் 1991ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட IRF அமைப்பு, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி முதன்முதலாக சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது.

2021ஆம் ஆண்டிலும் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் IRF அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது.

மத அடிப்படையில் சமூகங்களிடையே பகைமை மற்றும் வெறுப்பைத் தூண்டுவதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பு மீது மத்திய அரசு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

ஜாகீர் நாயக் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட மற்றும் தூதரக நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த புதிய அதிகாரப் பகிர்வு பார்க்கப்படுகிறது.

மாநில அளவில் நடவடிக்கைகள் தீவிரமடையுமா?

இதுவரை IRF அமைப்புக்கு எதிரான நிதி மற்றும் சொத்து தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசின் அதிகாரம் முக்கியப் பங்கு வகித்து வந்தது.

தற்போது மாநில அரசுகளுக்கும் குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அமைப்புடன் தொடர்புடைய நிதி ஆதாரங்கள் மற்றும் வளாகங்கள் குறித்து மாநில அளவில் நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அதிகாரங்கள் IRF அமைப்பு தொடர்பாக UAPA சட்டத்தின் 7 மற்றும் 8 பிரிவுகளின் கீழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top