Madras Murasu

பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார்: தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது – 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் வைத்து கைது

கடந்த ஜூலை மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், நவம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும், ஐஜி காமினி மேற்பார்வை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து புகார் அளித்த பெண் அதிகாரி, அவரது கணவர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஐந்தரை மணி நேரம் விசாரணை

நவம்பர் 27ஆம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில், சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் அருள் விக்னேஷை அவரது வீட்டில் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

டிசம்பர் 11 வரை சிறையில் அடைக்க உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அருள் விக்னேஷை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

201 சமூக வலைதளப் பதிவுகள் நீக்கம்

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாகத் தவறான மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு முரணான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், சைபர் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து 201 சமூக வலைதளப் பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top