சென்னை தொழிலதிபரும், ஆன்மிகப் பக்தருமான வர்தமான் ஜெயின், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ எடையுள்ள தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ₹206 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நவம்பர் 26, வியாழக்கிழமை காலை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி நாரா புவனேஸ்வரி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள் முன்னிலையில் தொழிலதிபர் வர்தமான் ஜெயின், 121 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினார்.
இந்த நகைகள் நவம்பர் 27, வெள்ளிக்கிழமை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட உள்ளன. இந்த பிரம்மாண்ட காணிக்கை திருப்பதியில் பக்தர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
46 வகையான தங்க ஆபரணங்கள்!
ஏழுமலையானுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த காணிக்கையில் கிரீடம், தோள்வளைகள், தோளணி, இடுப்புப் பட்டை, பாத அணிகலன்கள் உள்ளிட்ட மொத்தம் 46 வகையான தங்க ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன.
பெருமாளின் தலை முதல் பாதம் வரை அலங்கரிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள், அன்றாட கைங்கரியங்கள் மற்றும் விசேஷ அலங்காரங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 121 கிலோ தங்கத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்களின் மதிப்பு சுமார் ₹206 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2019 முதல் தொடரும் ஆன்மிகப் பணி!
வர்தமான் ஜெயின், கடந்த 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏழுமலையானுக்கு தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கி வருகிறார்.
இதற்கு முன்பு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு (SVBC) ₹7 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோசாலை மேம்பாட்டிற்காக ₹5 கோடி மதிப்பிலான கால்நடைத் தீவனக் கலவைத் தயாரிப்பு ஆலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
கோயில் சேவைகள் மற்றும் கால்நடைப் பாதுகாப்புப் பணிகளுக்கும் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார்.
யார் இந்த வர்தமான் ஜெயின்?
சென்னையைச் சேர்ந்த வர்தமான் ஜெயின், லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சுகாதாரத் தொழில்நுட்பம், பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் (BPO), ரோபோட்டிக் ப்ராசஸ் ஆட்டோமேஷன் (RPA) உள்ளிட்ட துறைகளில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.
இமேஜ் பிராசசிங் மற்றும் மருத்துவக் குறியீட்டுத் தொழில்நுட்பம் தொடர்பாகப் பல காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.
சுகாதாரத் துறைக்கான வருவாய் மேலாண்மைச் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான Access Healthcare நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
2025-ம் ஆண்டு, அந்நிறுவனத்தில் தனக்கிருந்த 70 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹16,000 கோடிக்கும் மேல்) மதிப்பிலான ஒப்பந்தத்தில் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் கிடைத்த பெரும் வருவாயின் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்காகச் செலவிட முன்வந்துள்ளார்.
தற்போது Asia (Chennai) Engineering என்ற சிவில் பொறியியல் நிறுவனத்தின் இணை உரிமையாளராகவும் இயக்குநராகவும், Vara Future LLP நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
இதற்கு முன்பு Vision HealthSource நிறுவனத்தை இணைந்து தொடங்கியதுடன், Dell Services நிறுவனத்தின் BPO பிரிவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
தொழில்முனைவில் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்கும், கோயில் சேவைகளுக்கும், கால்நடைப் பாதுகாப்புக்கும் அர்ப்பணித்து வரும் வர்தமான் ஜெயினின் 121 கிலோ தங்கக் காணிக்கை தற்போது திருப்பதியில் பேசுபொருளாகியுள்ளது.
