அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச சமய மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்து விட்டு இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார் விவேகானந்தர்.
இங்கிலாந்து சென்றிருந்த சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தவர் மார்க்ரெட். இந்தச் சந்திப்பு தான் மார்க்ரெட்டின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
மார்க்ரெட் அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்தவர். பெண்கள் கல்வி முக்கியத்துவத்திற்காக தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கியவர். சேவைகளில் நாட்டத்தை தொடங்கியவரின் வாழ்வு சுவாமி விவேகானந்தரை சந்தித்ததும் இன்னும் பக்குவமாக திசை மாறுகிறது.
சுவாமி விவேகானந்தர் மார்க்ரெட் நோக்கி “இந்தியப்பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அதில் நீ எனக்கு உதவ முடியுமா என்கிறார். பின் தனது வாழ்க்கையின் மறு அத்தியாயத்தை எழுதுகிறார் “மார்க்ரெட்”. 1898 ஜன.28ல் கல்கத்தா துறைமுகத்தில் வந்து இறங்குகிறார். தனது புதிய பயணம் ஆரம்பமாகிறது.
மார்க்ரெட் இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் கொல்கத்தாவை பிளேக் நோய் கடுமையாகத் தாக்க பரிதவித்துக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் குடிசையோடு குடிசையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குடிலாகவும் ஆபத்து கால அசரிரியாகவும் இருந்து சேவை செய்கிறார் மார்க்ரெட். அவரின் அன்பால் அணுகும் முறையால் சேவையால் “சகோதரி” என அழைக்கப்பெறுகிறார்.
சுவாமி விவேகானந்தர் மார்கரெட் எனும் பெயருக்குப் பதிலாக ‘நிவேதிதா’
என பெயர் சூட்டுகிறார்.
சகோதரி நிவேதிதாவை சந்திக்கிறார் சுப்ரமண்ய பாரதி தனது 23 ஆம் வயதில். தனது ஞான குருவாக அவரை ஏற்கிறார் பாதி. “குருமணி” என்று அழைத்து அவரைப் புகழ்ந்து பல இடங்களில் அவருடைய புகழைப் பாடுகிறார். அதோடு ம்டுமல்லாது தன்னுடைய சுதேச கீதங்கள் நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறார்.
விவேகானந்தரின் மறைவுக்கு பிறகு, இந்தியாவில் இன்னும் அதிக உத்வேகத்துடன் சேவையாற்றினார். அரவிந்தருடன் இணைந்து விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார்.
தாய்மொழியைப் பேசி பழகுங்கள். அதில் நாட்டின் வரலாற்றினை எழுத முயலுங்கள். கலாசாரம், விழுமியங்கள், பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்லுங்கள்’ என உரக்க கூறினார்.
மேலை நாட்டிலிருந்து ஆன்மிகக் கனவுகளோடு வந்து, இந்தியாவே தனது தாய்நாடு என கொண்டாடி கடைசி வரை ஊக்கத்தின் மறு உருவாக ஆன்மீகச் செம்மலாக வாழ்ந்த சகோதரி நிவேதிதா நினைவைப் போற்றுவோம்…!
சகோதரி நிவேதிதா பிறந்தநாள் இன்று!!!
வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

