வேலுமணி , சி.வி.சண்முகம் அணியினர் எடப்பாடியை எதிர்த்து போர்க்கொடி தூக்கியதால் கட்சி பதவிகளை இழந்துள்ளனர். கட்சியினரை நீக்குவதே எடப்பாடி வேலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
எடப்பாடி தனியாக சந்தித்த பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் கூட அண்ணா திமுக பெரிய அளவில் ஓட்டு வங்கியை இழக்கவில்லை. அவரே ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில் சி.வி சண்முகம், வேலுமணி அணி எப்படி தனியாக ஒரு அண்ணா திமுகவை நடத்தி மக்கள் ஆதரவு பெற முடியும். இவர்கள் தமிழக வெற்றி கழகத்தை வெளியே இருந்து ஆதரிப்பார்கள் அல்லது அந்த கட்சியிலேயே இணைவார்கள். இதுதான் அந்த அணியின் முடிவாக இருக்கும். இதில் வேலுமணி ஆரம்பத்திலிருந்து பாஜகவின் B Team என்று கருதப்பட்டவர். இன்று அவரும் மற்றவர்களும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறித்தான் தமிழக வெற்றி கழகத்தை ஆதரிக்கிறார்கள்.
இல்லாவிட்டால், அங்கு காங்கிரஸ் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். தற்போது எடப்பாடியையும் தங்கள் ஆதரவு நிலைக்கு மாற்ற அமைச்சர் அருண் ராஜை விஜய் அங்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் எடப்பாடியை சந்தித்து பேசி இருக்கிறார். அதிக எண்ணிக்கையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெறுவது தான் தனது ஆட்சி நீண்ட காலத்திற்கு பிரச்சினை இல்லாமல் இருக்க சரியான வழி என்று விஜய் கருதுகிறார். அவரை வாழும் எம்ஜிஆர் என்று சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் புகழ்ந்தார்.
அதிமுகவை பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று தரும் கவர்ச்சி மிக்க தலைவர் இல்லை. அந்த இடத்தை விஜய் நிரப்ப விரும்புகிறார். இல்லாவிட்டால் இந்த குதிரை பேரத்தில் இறங்கி இருக்க மாட்டார். இந்த நிலையில் அதிமுக அணி வந்ததால் ஏற்கனவே த.வே.கவுக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் நிலைமை கேள்விக்குறியாக மாறுகிறது. திமுக அணியிலும் கூட வைகோ போன்றவர்கள் விஜய் குதிரை பேரம் நடத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
அவர்களது 2 எம்.எல்.ஏக்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தவர்கள். எனவே, வெளிப்படையாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஆனாலும் இன்று அவர்கள் சட்ட சபைக்கு வரவில்லை. தொடர்ந்து மாறிவரும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக தனியாக அரசியல் நடத்த வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எனவேதான் மற்றொரு தேசிய கட்சியான பாஜகவை ஆதரவை அந்த கட்சி நாடும் என்று பேசப்பட்டது. ஏனென்றால் அந்த கட்சியும் தனித்து விடப்பட்டுள்ளது.
ஆனால், அப்படி எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்பதை குறிக்கவே சட்டசபையில் சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி பேசியிருக்கிறார். ஒருவேளை திமுகவில் பாஜக ஆதரவு அணியும் பாஜக எதிர்ப்பு அணியும் உருவாகிவிட்டதாக கூட கருதலாம். எம்.பி-க்களாக இருப்பவர்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் மத்திய மந்திரி ஆகலாம் என்று கனவு கண்டிருப்பார்கள். இது அடுத்த தலைமுறை தலைவராக வரும் உதயநிதி அணியினருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்.
மொத்தத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்,
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், ஏதோ ஒரு காரணத்துக்காக தமிழக வெற்றி கழகத்தை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், மந்திரி சபையில் காங்கிரஸ் சேரக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
கே.கே.ஆர்.ஆதித்தன் – பத்திரிகையாளர்

