ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் (03.07.2023) சிப்காட் தொழில் நண்பன் முதல் ஆண்டு சந்திப்புக் கூட்டம் (SIPCOT Bizbuddy – Fist Annual Outreach) நடைபெற்றது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரால் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தோற்றுவிக்கப்பட்டு, நிறுவப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில், ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற்பூங்காக்களை சுமார் 38,696 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தி, வளர்ச்சியடைய பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிப்காட் தொழில் பூங்காக்களில் தரமான சாலை வசதி, தெருவிளக்கு, மழைநீர் வடிகால், நீர்விநியோகம், கண்காணிப்பு அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு போன்ற அடிப்படை வசதிகளோடும் சிறப்பு கட்டமைப்புகளான தொழிலாளர் தங்குமிடவசதி, தொழில் புத்தாக்கமையம், சரக்கு வாகன நிறுத்தம் மற்றும் போதுமான பசுமை சூழல் மேம்பாடு, நன்கு பராமரிக்கப்படும் திறந்தவெளி பகுதிகள் (OSR) ஆகியவற்றினை ஏற்படுத்தி சிப்காட் தனது தொழில் பூங்காக்களை நிலையான சுற்றுச்சூழல் பாதுக்காப்பு கொண்ட பூங்காக்களாக மாற்றி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு திட்டமான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியினை 2030-க்குள் எய்திடும் வகையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் இன்று (03.07.2023) காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமையப்பெற்றுள்ள தொழில்சாலைகளின் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் சிப்காட் தொழில் நண்பன் முதல் ஆண்டு சந்திப்பு (SIPCOT Bizbuddy – Fist Annual Outreach) நடைபெற்றது.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ‘’முதலமைச்சர், முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை நன்கு கவனித்து சிறந்த முறையில் தீர்வு காணுமாறு அறிவுறித்துள்ளார்கள். இந்த கூட்டத்தின் வாயிலாக நாங்கள் தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் தீர்வு காணப்படும் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும். தொழில் பூங்காக்களில் மேலும் வசதிகள், உட்கட்டமைப்புகள் மேம்படுத்துதல் குறித்தும் விரிவான முறையில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவற்றின் மீது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும். மேலும் சிப்காட் மூலம் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது:
2023-24-ஆம் நிதி ஆண்டின் அறிப்பின்படி இருங்காட்டுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 200 தொழிலாளர் தங்குவதற்கான தங்குமிடம் 1.08 ஏக்கரில் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
பிள்ளைப்பாக்கத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 0.70 கி.மீ நீளத்திற்கு பிள்ளைப்பாக்கம் கிராம சாலை 8.5 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தப்படும். மேலும், நீர்தேக்குவதற்கான கீழ்நிலைதொட்டி மற்றும் 5 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ரூ.4.85 கோடியில் கட்டப்படும்.
திருப்பெரும்புதூரில் சரக்கு வாகன நிறுத்தும் இடங்கள் மூன்று இடங்களில் ரூ.5.92 கோடியில் ஏற்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேலும், ஒரகடத்தில் ரூ.5.39 கோடியில் ஏற்படுப்பட்டுள்ள சரக்கு வாகன நிறுத்தும் இடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
வல்லம் வடகாலில் ரூ.14.10 கோடியில் வல்லக்கோட்டை-மேட்டுபாளையம் கிராம சாலை 18 மீட்டர் விரிவுப்படுத்தப்படும். மேலும், மேட்டுப்பாளையம் கிராம சந்திப்பிலிருந்து வானூர்தி பூங்கா வரையிலான கிராம சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் 18 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்தப்படும்.
ஒரகடத்தில் 150 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக 4 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.5.39 கோடியில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும். இது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்’’. என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற 250 மேற்பபட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பலருக்கு பேச வாய்ப்பளித்து, அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், சிப்காட் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, சிப்காட் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, துறை அலுவலர்கள் மற்றும் ஒரகடம், இருங்காட்டுகோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம் வடகால் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உட்பட திருப்பெரும்புதூர் மற்றும் மேற்கூறிய தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.