மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அறிக்கை:
சாளுக்கிய மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, வட ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம் காணியம்பாக்கம் தேவதானம் அருள்மிகு பிரசன்னீஸ்வரர் மற்றும் ரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தில் பலமுறைகேடுகளும் நிர்வாகச் சீர்கேடுகளும் இருப்பதாக அந்த பகுதி மக்கள், கோவில் பரம்பரை அறங்காவலர் ஏ.ஆர். கோபி மீது குற்றச்சாட்டுகள் கூறி, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று போராடி வந்தனர்.
மறுமலர்ச்சி தி.மு.கழக மாவட்டச் செயலாளர் பூவை மு.பாபு , வைகோதாசன் உள்ளிட்டோர் அப்பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தந்ததோடு அவர்களுடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் கொடுத்தும் பரம்பரை அறங்காவலர் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் , இது குறித்து என்னிடம் முறையிட்டார்கள்.
நான், இயக்கத் தந்தை வைகோ -விடம் ஒரு பரிந்துரை கடிதம் பெற்று 11.6.2022 அன்று அமைச்சர் சேகர் பாபு -விடம் கிராம மக்கள் முன்னிலையில், ஆலய நிர்வாகத்தில் பரம்பரை அறங்காவலர் ஏ. ஆர். கோபி செய்துள்ள முறைகேடுகளைப் பற்றி விவரமாக எடுத்துக் கூறினேன். அனைத்து செய்திகளையும் கவனமுடன் கேட்ட அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள்.
மீண்டும் நான் அமைச்சர் சேகர் பாபு-வை 17.12.2022 அன்று சந்தித்து மேல் நடவடிக்கை குறித்து நினைவுபடுத்தினேன். தொடர்புடைய இணை ஆணையரிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சேகர்பாபு ஆணையிட்டார்கள்.
அதன் அடிப்படையில் இணை ஆணையர் நேரடி விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நான் அமைச்சர் சேகர்பாபு -விடம் இது குறித்து நினைவுபடுத்திய 24 மணி நேரத்திற்குள், அக்கோயில் பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர். கோபி தற்காலிமாக பதவி நீக்கம் செய்து ஆணைப் பிறப்பித்துள்ளார்கள்.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கும் தி.மு.கழக ஆட்சிக்கும் இடையே பாலமாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம் என்று ஊடகவியலாளர்களிடமும் பத்திரிகையாளர் களிடமும் நான் தெரிவித்திருந்தேன்.
அந்த அடிப்படையில், 60 ஆண்டு காலமாக தேவதானம் அருள்மிகு பிரசன்னீஸ்வரர் மற்றும் ரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தில் பலமுறைகேடுகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் செய்து வந்த பரம்பரை அறங்காவலரை நீக்க பல அரசியல் கட்சியினரும் முயன்றும் இயலாத நிலையில், நாம் மேற்கொண்ட முயற்சியால் பரம்பரை அறங்காவலர் ஏ.ஆர். கோபி தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பொன்னேரி வட்ட மக்களுக்கு பெரு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்துள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்ட முதலமைச்சர்-க்கும் அமைச்சர் சேகர்பாபு -க்கும் பொன்னேரி வட்ட மக்கள் சார்பாகவும், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.