’’சிறு வயது பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கையில் மனதில் தோன்றிய பதிவு இது..!’ என்று எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் நெல்லை ஆ.கோமதி நாயகம்.
முன்பெல்லாம் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கும். 1ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் படித்தேன். அப்பொழுது பள்ளிகளில் சரியான வகுப்பறை வசதி கூட கிடையாது.
மழையில் ஒழுகும் வகுப்பறைகள். குறிப்பாக குடிக்க தண்ணீர் கிடையாது. சத்துணவு செய்ய வரும் அக்கா காலையில் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வைப்பார்கள், அதுதான் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணாக்கர்களுக்கும் அன்றைய நாள் முழுமைக்குமான குடிநீர்..
மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி கிடையாது.
மாணவர்களை விட மாணவிகள் கழிப்பிடத்திற்கு சிரமப்பட்டது இன்றும் நினைவில் உள்ளது. அதிலும் குறிப்பாக தண்ணீர், கழிவறை வசதிகள் சரியாக இல்லாத எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் தங்களுடைய மாதவிடாய் நாட்களை எப்படி கடினமாக கழித்திருப்பார்கள் என்று நினைத்து பார்க்க முடிகிறது. இப்படி அடிப்படையான கட்டமைப்புகள் அந்த காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களில் இல்லை.

ஆனால் இன்று அரசு பள்ளியில் தரமான கான்கிரீட் வகுப்பறைகள், சின்டெக்ஸ் அமைக்கப்பட்டு குடிநீர், சுத்தமான கழிவறை வசதி. நோட்டுகள், புத்தகங்கள் சீருடைகள், செருப்பு என அனைத்தும் அரசு அருமையாக வழங்குகிறது..
ஆனால் சமூகத்தில் நம்முடைய மோகம் தனியார் பள்ளியை நோக்கி செல்கிறது. நம்ம புள்ளையும் நாலு எழுத்து இங்கிலீஷ்ல படிச்சுறாதா என்று தன்னுடைய தகுதியையும் மீறி ஆங்கில வழி கல்விக்காகவும், ஆங்கில வழி கல்வியில் தான் திறன் படைத்த மாணவர்களாக உருவாகுவார்கள்; அப்பொழுதுதான் போட்டி நிறைந்த உலகில் நம்முடைய குழந்தைகளும் நிலைத்து நிற்க முடியும் என்று தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம்.
’ஆ.கோமதிநாயகம்’ பத்திரிகையாளர்.

