மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஜுலை 7-ம் தேதி சென்னை வருகிறார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மெடிக்கல் லீனியர் ஆக்சிலரேட்டர் (லினாக்) கருவியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தொடங்கிவைக்கும் அவர், மருத்துவ மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள், தொழில்துறையினர் மற்றும் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்பார்.
அவரது பயணத்தின் தொடக்கத்தில் தென்னிந்திய தொழில்,வர்த்தக சபை(சிக்கி)யின் 113வது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொடக்க உரை நிகழ்த்தும் அமைச்சர், இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித்திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு உதவியுள்ள அரசின் கொள்கைகளையும் முன்முயற்சிகளையும் எடுத்துரைப்பார். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக சவால்கள் இருந்தபோதும், 2020-21 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையின் 9.6% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி பற்றி அவர் விவரிப்பார்.
இதைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மெடிக்கல் லீனியர் ஆக்சிலரேட்டர் (லினாக்) கருவியை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அமைச்சர் தொடங்கிவைப்பார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, பயன்பாட்டு நுண்ணலை மின்னணுப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக்கான சங்கம் (சமீர்), இதனை உருவாக்கியுள்ளது. இது சுகாதாரத் துறையில் உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இதுவரை இத்தகைய நான்கு கருவிகளை உருவாக்கியுள்ள இந்த ஆராய்ச்சி சங்கம் முதல் கருவியை சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திற்கு வழங்கியது. இரண்டாவது கருவியைக் கொல்கத்தாவின் தாகூர்புகூர் பயிற்சி நிறுவனத்திற்கும் மூன்றாவது கருவியை சண்டிகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கியது. நான்காவது கருவி அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப்பின் பல்வேறு துறைகளின் பிரமுகர்களை சந்திக்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமர் மோடியின் அரசு மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சிகளை எடுத்துரைப்பார்.

