புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்கு புத்துயிர் அளித்து வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் நலப் பணிகளை மேற்கொள்ள ரூ.10.00 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை:
2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை பத்தி எண்.45-இல் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்கு புத்துயிர் அளித்து வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் நலப் பணிகளை மேற்கொள்ள ரூ.10.00 கோடி வழங்கப்படும்”
மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, புதிரை வண்ணார் இன மக்களின் நிலையை உயர்த்துவதற்கும் கல்வியில் மேம்பாடு அடையச் செய்வதற்கும் ஏதுவாக இவ்வின மக்களின் வாழ்வாதாரம் பற்றிய அறிக்கை மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான மென்பொருள் உருவாக்குதல், கணக்கெடுப்பு நடத்துதல், இணைய முகப்பினை (Portal) உருவாக்குதல், தொழில் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள ரூ. 10.00 கோடி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை (நிலை) எண். 75, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந6) துறை, நாள் 20.06.2023 –இல் ஆணை வெளியிடப்பட்டது.

