இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகச் செயலர் தேசிய சித்த மருத்துவமனையின் செயல்பாடுகள், அதன் சேவைகள், தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அகில இந்திய அளவில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பாராட்டினார். இந்தியாவில் உள்ள அனைத்து ஆயுஷ் மருத்துவ நிறுவனங்களை விடவும் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார். விழாவில் பேசிய NABH முதன்மை செயல் அலுவலர் திரு. அதுல் மோகன் கோச்சார், மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை என்றும், இந்நிறுவனம் மக்களுக்கு நல்ல தரமான சேவையை வழங்குகிறது என்றும் கூறினார்.
NABH மறு அங்கீகாரச் சான்றிதழைப் பெற்ற பிறகு, இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு அயராது உழைத்த அனைவருக்கும் நிறுவனத்தின் இயக்குநர் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். அடுத்த கட்டமாக, மருத்துவமனையில் செயல்படும் ஆய்வகங்களுக்கு என்ஏபிஎல் தரச் சான்றிதழைப் பெற அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நாட்டின் முதன்மையான சித்த மருத்துவ நிறுவனங்களான, தேசிய சித்த மருத்துவக் கழகம் மற்றும் மத்திய சித்தமருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், மே 9, 2023 அன்று, தேசிய சித்த மருத்துவ நிறுவன கருத்தரங்க அரங்கில் நடைபெறும். செயலாளர், சிறப்பு செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர், சித்த மருத்துவ அலுவலர்கள் போன்ற உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டங்களில், இவ்விரு நிறுவனங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். நாடு முழுவதும் சித்த மருத்துவத்தை எடுத்துச் செல்ல தேவையான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்