Home விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்: பதிரனாவுக்கு தோனி சொன்ன அட்வைஸ் !

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்: பதிரனாவுக்கு தோனி சொன்ன அட்வைஸ் !

0
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்: பதிரனாவுக்கு தோனி சொன்ன அட்வைஸ் !

மதீஷா பதிரனா டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே போகக்கூடாது என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023-ல் சிஎஸ்கேவுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் பதிரனா, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக கடைசிக் கட்ட ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துகிறார். நடப்புப் பருவத்தில் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 27.2 ஓவர்களை வீசியுள்ளார். இதில் 4 ஓவர்களை மட்டுமே இன்னிங்ஸின் 12-வது ஓவருக்கு முன்பு வீசியுள்ளார். இவர் வீழ்த்தியுள்ள 10 விக்கெட்டுகளும் கடைசிக் கட்டத்தில் வீழ்த்தப்பட்டவை. எகானமி 7.6.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

ஆட்டம் நிறைவடைந்தவுடன் பதிரனா குறித்து தோனி கூறியதாவது:

வழக்கமான பந்துவீச்சு பாணியில் இல்லாதவர்களின் பந்துகளைக் கணிப்பது பேட்டர்களுக்குக் கடினமாக இருக்கும். குறிப்பாக டி20 மாதிரியான போட்டிகளில் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள நினைக்கும்போது, அது சிரமம்.

பந்துவீச்சுப் பாணி குறித்து மட்டுமே பேசும் நாம், அவருடையப் பந்தின் வேகம், அவரிடம் உள்ள மாற்றுப் பந்துகள் உள்ளிட்டவைப் பற்றி பேசுவதில்லை. இவையனைத்தும்தான் அவரை சிறப்பானவராக மாற்றுகிறது.

இவர் டெஸ்ட்டில் நிறைய விளையாடக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே இவர் போகக் கூடாது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் முடிந்த அளவுக்குக் குறைவான ஆட்டங்களிலேயே விளையாட வேண்டும். இவர் நிறைய மாறப்போவதில்லை என்பதால், ஐசிசி நடத்தும் போட்டிகளில் விளையாட வேண்டும். முக்கியமான கட்டங்களில் இவரைப் பயன்படுத்த வேண்டும்.

அதேசமயம், அனைத்து ஐசிசி போட்டிகளிலும் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவர் இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக இருப்பார்.

அவர் ஓர் இளம் வீரர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. கடந்தாண்டு இவர் வந்தபோது, கொஞ்சம் ஒல்லியாக இருந்தார். தற்போது கூடுதல் வலிமையுடன் இருக்கிறார். இதன்மூலம், இலங்கைக் கிரிக்கெட்டுக்காக நீண்ட காலம் செயல்படவுள்ளார். அதேசமயம், இவரது பணிச்சுமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்றார் தோனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here