மீண்டும் ஒரு தோனியின் கேப்டன்சி மாஸ்டர்கிளாஸ்! குஜராத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது.
2022 ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.”அடுத்த ஆண்டு கடினமாக உழைத்து மீண்டு வருவோம்” என்று தோனி கூறினார். சொல்லி வைத்தது போலவே இந்த ஆண்டு குஜராத்தை முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. 14 பருவங்களில் 10 முறை இறுதிச்சுற்றுக்கு சென்றது என்பது உண்மையில் அசாத்திய சாதனை!
இந்த வருடம் தோல்வியுடன்தான் ஆரம்பித்தது சிஎஸ்கே. பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே தலையைக் காட்டினார். மொயீன் அலி, ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் பேட்டிங்கில் கைகொடுக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மர்ம சுழலர் தீக்ஷனா இந்தப் பருவம் முழுக்கவே ஃபார்ம் இல்லாமல் தடுமாறினார்.
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹங்கர்கேகர் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். பதிரனா, தேஷ்பாண்டே போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டே விளையாட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் தோனி. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோனி சிஎஸ்கேவை இறுதிச்சுற்றுக்கு எப்படி அழைத்துச் சென்றார்?
இந்தப் பருவத்தில் முதல் சில ஆட்டங்களில் அணித் தேர்வில் சில பரீட்சார்த்த முயற்சிகளை தோனி மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு கடைசி 9 ஆட்டங்களில் அவர் அணியில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் வெற்றிக்கு காரணம் அணி வீரர்கள் மீது அவர் வைக்கும் முழு நம்பிக்கை. உதாரணமாக தீபக் சஹாரை எடுத்துக் கொள்வோம். முதல் நான்கு ஆட்டங்களில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவருடைய எகானமி ரேட் 10.38. ஆனாலும் தோனி அவரைக் கைவிடவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் ஓவருக்கு 7.21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சஹார். வேறு எந்தவொரு அணியாக இருந்தாலும் நான்கு ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காதவரை அணியில் வைத்திருக்காது. அம்பதி ராயுடுவும் தீக்ஷனாவும் ஃபார்மில் இல்லாத போதும் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையரில் இருவருமே அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் ஆட்டத்தை நிதானமாக அணுகுவது தோனியின் இன்னொரு வெற்றி ரகசியம். லீக் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது தோனி விளையாடிய விதம் ஒரு நல்ல உதாரணம். கடைசி ஐந்து ஓவர்களில் கூட தாறுமாறாக ஆட முற்படாமல் யாரைக் குறிவைத்து தாக்கவேண்டும் என்ற திட்டத்துடன் விளையாடினார் அவர். அந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெறமுடியாவிட்டாலும் தோனியின் வியூகமும் விவேகமும் எதிரணி ரசிகர்களையும் கவர்ந்தது.
குஜராத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தையோ எடுத்துக்கொள்வோம். கான்வே ஆரம்பம் முதலே சரியான டைமிங் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். வேறொரு கேப்டனாக இருந்திருந்தால் “ரிஸ்க் எடுத்து விளையாடு” என்று பேட்டருக்குத் தகவல் அனுப்பியிருப்பார். ஆனால் தோனி அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கான்வேவை அவர் போக்கில் விளையாடுவதற்கு அனுமதித்தார். சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தில் கான்வேவின் அந்த 40 ரன்கள் எவ்வளவு முக்கியம் என்பது ஆட்டத்துக்குப் பிறகுதான் தெரிந்தது.
தோனியின் வெற்றி ரகசியங்களில் முக்கியமானது, அணி வீரர்கள் மீது அவர் செலுத்துகின்ற அக்கறை. குஜராத்துக்கு எதிராக குவாலிஃபையர் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சிஎஸ்கே சீருடையில் வந்திருந்தார் ராபின் உத்தப்பா. கேகேஆர், ராஜஸ்தான் போன்ற அணிகளில் விளையாடியிருந்தாலும் அவர் தன்னை ஒரு சிஎஸ்கே வீரராகவே இன்றும் உணர்கிறார். உத்தப்பா மட்டுமல்ல ஃபாப் டு ப்ளஸி தன்னுடைய சுயசரிதையில் தன் மகள் உடல் நலமில்லாமல் இருந்த சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எப்படித் தனக்கு உறுதுணையாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்.
சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தோனி வீரர்களுக்கு கொடுக்கும் தெளிவான ரோல் டெஃபனிசன் (Role definition) என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் ஃபிரெடி வைல்ட். இந்த ஆண்டில் ஸ்பின் ஹிட்டராக துபேவை அவர் பயன்படுத்திய விதம் ஒரு நல்ல உதாரணம். ‘டெத் ஓவர்’ ஸ்பெஷலிஸ்டாக பதிரனாவை அவர் கையாண்ட விதம் உண்மையிலேயே தோனியின் மாஸ்டர்கிளாஸ்!
ஐபிஎல் போன்ற பரபரப்பான கிரிக்கெட் போட்டியில் ஒரு கேப்டன் சமயோஜிதமாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நேற்றைய ஆட்டத்தில் பாண்டியா பேட்டிங் செய்தபோது லெக் சைடில் இருந்த ஜடேஜாவை பாயிண்ட் திசையில் நிற்கவைத்தார் தோனி. கைமேல் பலனாக அதே ஃபீல்டரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பாண்டியா. பதிரனா, போதிய நேரம் களத்தில் இல்லை என்பதால் அவர் பந்துவீச முடியாது என்று நடுவர் கூறியபோது, தோனி கையாண்ட தந்திரம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதுபோல ஐபிஎல்-லில் இறுதிச் சுற்றுக்கு செல்வது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பத்தாவது முறையாக! இன்னும் ஓர் ஆட்டம்தான் மீதமுள்ளது. ஐந்தாவது முறையாக கோப்பையைக் கையில் ஏந்துவாரா தோனி?