தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:
உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ. 850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டுவது துக்ளக் ஆட்சியை தான் நினைவு படுத்துகிறது. துக்ளக் ஆட்சியில் தலைநகர் மாற்றப்பட்டது. ஆனால் நவீன துக்ளக் ஆக செயல்பட்டு வருகிற மோடி ஆட்சியில் பாராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு பழங்குடி இனத்தை சேந்த பெண் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அவர்களை அழைக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்துகொள்ளலாம்.
பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர். பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் குடியரசு தலைவரையும் அவமதிக்கிற செயலாகும். எனவே தான் 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர். இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

