அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,768 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு, தாள் ஒன்றில் வெற்றி பெற்றவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்தவர்கள் வயது, 2024 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேதி அன்று 58 வயது நிரம்பி இருக்க கூடாது. பொதுப் பிரிவினை சேர்ந்த விண்ணப்பத்தாரர் வயது, 2024 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி அன்று 53 வயது, பூர்த்தி ஆகி இருக்க கூடாது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்திசெய்ய வேண்டும். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள், தேர்வுக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். மற்றவர்கள், 600 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் இடைநிலை ஆசிரியர் தேர்வு விளம்பரம் Notification – 2024
ஜுன் 23 ஆம் தேதி அன்று போட்டித் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில், தமிழ் தகுதித் தேர்வு 30 வினாக்களைக் கொண்டதாக இருக்கும். கொள்குறி வகையிலான இந்த தேர்வில் மொத்த மதிப்பெண் 50. இதில், குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண் எடுக்க வேண்டும். அதாவது, 20 மதிபெண் எடுத்தால் மட்டுமே, இந்த போட்டித் தேர்வில் உள்ள இரண்டாவது தாள், திருத்த எடுத்துக் கொள்ளப்படும்.
இரண்டாவது தாள் என்று அழைக்கப்படும், மெயின் தேர்வில் தமிழ் அல்லது தெலுங்கு அல்லது மலையாளம் அல்லது கண்னடம் அல்லது உருது ஆகிய மொழிப் பாடத்தில் ஏதாவது ஒன்றில் இருக்கும் 30 கேள்விகளை எடுத்து பதில் அளிக்கலாம். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் என்று மொத்தம் 120 கேள்விகள் கேட்க்கப்படும். மெயின் தேர்வின் மொத்த மதிப்பெண் 150. கொள்குறி வகையிலான இந்த தேர்வு பாடத்திட்டம், 10 ஆம் வகுப்பு தரத்தில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தகுதித் தேர்வு, மெயின் போட்டி எழுத்துத் தேர்வு என்று இரண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணுடன் ஏற்கனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.