’’தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி, மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடைவிதிப்பது அநீதி. ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை” என தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
திமுக, அதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் அந்த புதிய உத்தரவில் கூறியுள்ளது என்ன?
இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதற்கும் இடங்களை அதிகரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட “மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பத்து லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள்” என்ற அளவுக்குள் அது பொருந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இந்த வரையறையைத் தாண்டிய நிலையில், அரசோ, தனியாரோ இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவக்க முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் எந்தத் தென்னிந்திய மாநிலமும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க முடியாது. மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், கோவா, சண்டிகர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க முடியாது.
10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற விதியை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எந்தக் காரணத்தையும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை வைத்திருக்க வேண்டும் என்பதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறது. ஆகவே, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க விரும்புகிறது.
ஆனால், தேசிய மருத்துவக் கமிஷனின் இந்த விதியால், இனி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்காது.
“ஒரு மாநிலத்திற்கு எவ்வளவு மருத்துவர்கள் தேவை, எவ்வளவு மருத்துவர்களை அரசுப் பணியில் சேர்க்க முடியும், எவ்வளவு பேர் தனியார் மருத்துவத் துறையில் பணியாற்றுவார்கள், எவ்வளவு பெண் மருத்துவர்கள் தேவை, எவ்வளவு மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்பதையெல்லாம் அந்தந்த மாநில அரசுகள்தான் கணக்கிட முடியும். தங்கள் மாநிலத்திற்குத் தேவையான அளவுக்கு மருத்துவர்களை உருவாக்கும் உரிமை மாநில அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசுகள் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இதில் மத்திய அரசுக்கோ, தேசிய மருத்துவ ஆணையத்திற்கோ எந்த உரிமையும் கிடையாது” என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த விதிக்குக் வேறு காரணமும் இருக்கிறது என்கிறார்கள் சில மருத்துவர்கள்.
மருத்துவ சீட் புள்ளி விபரங்கள் சொல்வது என்ன?
இந்தியா முழுவதும் உள்ள 593 மருத்துவக்கல்லூரிகளில், 69 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 67 கல்லூரிகளுடன் உத்தர பிரதேசம் இராண்டாமிடத்திலும், 59 கல்லூரிகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளன.
அவற்றில் மொத்தமுள்ள 45,698 மருத்துவப் படிப்பு இடங்களில், அதிபட்சமாக 10,375 இடங்களை தமிழகம் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 312 அரசு கல்லூரிகளில் 22,933 இடங்கள் உள்ள நிலையில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,125 மாணவர்கள் படிக்கின்றனர். இது இந்திய அளவில் 12% ஆகும். இதேபோல் மத்திய அரசின் தொகுப்புக்கும் தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக இடங்கள் கிடைக்கின்றன.
281 தனியார் மருத்துவகல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேசத்திலும் தலா 32 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் அரசு, தனியார் என 17 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2350 இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன. இதில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் மூலம் 1450 இடங்கள் நடப்பாண்டில் கிடைத்திருக்கின்றன.
என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

