Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு – பள்ளங்கள்..!’’ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Madras Murasu
spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை’’என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு – பள்ளங்கள்..!’’ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழாவில்...

    ’’என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு – பள்ளங்கள்..!’’ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது:

    “தலைவர் என்பார் – தத்துவ மேதை என்பார்- நடிகர் என்பார் – நாடக வேந்தர் என்பார்- சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார் – மனிதரென்பார் – மாணிக்கமென்பார் – மாநிலத்து அமைச்சரென்பார் – அன்னையென்பார் – அருள்மொழிக் காவல் என்பார் -அரசியல்வாதி என்பார் – அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் – நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை பெயரும் தந்தார்” – என்று ‘காஞ்சி தந்த வள்ளுவன்’ பேரறிஞர் அண்ணா பற்றி அடுக்கு மொழியில் கவிதை நடையில் சொன்னார், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்!

    அண்ணாவை தந்த தாய்மடியாம், கலைமிகு காஞ்சி மாநகருக்கு நான் வந்திருக்கிறேன்.  என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி இருந்தது இந்த காஞ்சி மாநகர்.  

    மிகவும் சின்ன வயதிலேயே கோபாலபுரம் பகுதியில் ‘இளைஞர் தி.மு.க.’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.  அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்னுடைய வழக்கம். 

    1971-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கக்கூடிய அவருடைய கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து – வணங்கி, அண்ணா சதுக்கத்திலிருந்து ‘அண்ணா சுடரை’ கையில் ஏந்தி தொடர் ஓட்டமாக நானும், என்னுடைய நண்பர்களும் புறப்பட்டு, காஞ்சிபுரம் வந்து, இங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த கழக மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கையில் அண்ணா சுடரை நான் ஒப்படைத்தேன். அப்போது, தலைவர் கலைஞருக்குப் பக்கத்தில் அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய நாவலர், பொருளாளராக இருந்த மரியாதைக்குரிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்தார்கள்.

    அன்றைக்கு 18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி இங்கே வந்து நான், இன்றைக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் எடுத்து வந்த, சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட தமிழ்ச் சமுதாயத்தைக் காக்கும் திராவிடச் சுடரை ஏந்தி வந்திருக்கின்றேன். அவர்களுடைய கொள்கைகளை ஏற்று வாழ்வதில்தான் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்ற “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை” தொடங்கி வைக்க இங்கே வந்திருக்கின்றேன்.

    இத்திட்டம் தொடங்குவது, அதை நான் தொடங்கி வைப்பது, என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேறாக நான் கருதுகிறேன். தாய் தாய் தமிழ்நாட்டிற்கு  “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் இனி இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்தப் பெயர் நீட்டிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்றார்.

    அதே போல், இன்றைக்கு இந்த மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்.

    இந்த இரண்டரை ஆண்டில் எத்தனை திட்டங்கள்! 

    மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதிகளை தருகின்ற ‘விடியல் பயணம்’ திட்டம், பசியோடு பள்ளிக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வருகின்ற மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம், இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பை உருவாக்கும், நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கின்றேன்.

    சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார். “காசு இல்லாததால் மருந்து மாத்திரை சாப்பிடுறதில்ல.. இனி மாத்திரை வாங்குவேன்” என்று ஒரு பாட்டி சொல்கிறார்கள்.

    இன்னொரு பெண்மணி சொன்னார்கள், என்ன சொன்னார்கள் என்றால், “தினமும் ஒருவேளைதான் சாப்பிடுகிறேன்.. இந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா… காலையில ரெண்டு இட்லி சாப்பிடுவேன்” என்று சொன்னார்கள்.

    இந்த இரண்டு பதிலும் எனக்கு நெகிழ்ச்சியை தந்தாலும், காலத்திற்கும் எண்ணி நான் பெருமைப்படுகிற மாதிரியான ஒரு பதிலை, நாம் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோமோ அதை ஒரு வரியில் சொல்கின்ற மாதிரி இன்னொரு பெண்மணி ஒன்று சொன்னார்…

    “சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்” என்று அவர் சொன்னார். அதாவது, “சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்” என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?

    அண்ணா பிறந்தநாளில், கலைஞர் நூற்றாண்டில் செயல்படுத்துகின்ற இந்தத் திட்டத்திற்கு, இதைவிட என்ன பாராட்டு இருக்க முடியும்? இந்தக் கூட்டத்தில் இருக்கின்ற உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும். பதில் வேறு வேறாக இருந்தாலும் பயன் ஒன்றுதான்.

    இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி!

    “இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இவர்களால் தர முடியாது” என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர்மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி. இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல – தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில், நகரங்களில் நடந்துகொண்டு இருக்கிறது.

    நான் காஞ்சிபுரம் வந்திருப்பது மாதிரியே, அமைச்சர்கள் எல்லோரும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நான் போட்ட ஒரு கையெழுத்து, பலரது வாழ்க்கையை மாற்ற போகிறது என்ற அந்த உரிமையை எனக்குக் கொடுத்தவர்களே நீங்கள்தான்!

    தமிழ்நாட்டு மக்களான நீங்கள் உதயசூரியன் சின்னத்தையும், எங்கள் கூட்டணிக் கட்சிகளுடைய சின்னங்களையும் வாக்கு இயந்திரத்தில் அழுத்துனதாலதான் முதலமைச்சர் பொறுப்பில் உட்கார்ந்து உங்களுக்குத் தேவையானதை செய்து கொண்டு இருக்கிறேன்.

    மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன். இந்த இரண்டு திட்டங்கள், நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்! 

    இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.

    இந்த இரண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியோட நோக்கங்கள். தந்தை பெரியாரிடம், பேரறிஞர் அண்ணாவிடம், தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் கற்ற பாடங்களுடைய அடிப்படையில்தான் இந்த திட்டத்தைத் தீட்டி இருக்கிறோம். வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், தாய்வழிச் சமூகமுறைதான் மனிதகுலத்தில் முதலில் வழிநடத்தி வந்திருக்கிறது.

    உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறினால்கூட பெண்களுடைய உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே இருந்தது.  ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கங்களாலும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

    பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தினுடைய உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற – நடத்துகின்ற காலம் ஒன்று இருந்தது. கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும், பெண்களும் இழிவானவர்கள்” என்றெல்லாம்கூட எழுதி வைத்திருந்தார்கள்.

    இன்றைக்கு மானமும், அறிவும் உள்ள யாரும் அந்த மாதிரி பேசுவதில்லை. பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது – வேலைக்கு போகக் கூடாது – வீட்டுப்படியை தாண்டக் கூடாது – அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகள வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்!

    8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்… ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ளலாம். மறுமணம் செய்துகொள்ளக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

    பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி – கல்லூரிக்கு வந்துவிட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக் கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்!

    இன்றைக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படிக்கிறார்கள். அதுவும் நன்றாக படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டார்கள். இந்த பாலினச் சமத்துவத்தை கொண்டு வந்து பெண்ணும், ஆணும் சரிநிகர் என்று உயர்த்தியதுதான் நம்முடைய திராவிட மாடல்!

    இன்னும் சொல்லவேண்டும் என்றால், தந்தை பெரியார் சொன்ன மாதிரி, ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்! ஏழைத் தாய்மார்களின் குழந்தைகள் இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஆசிரியர்களாக வலம் வருவதை பார்க்கின்றபோது பெருமையாக இருக்கிறது. இந்தச் சமூகத்தில் வெற்றிபெற்ற ஒவ்வொரு சாதனையாளருடைய பின்னாலும், பெண்களுடைய உழைப்பு இருக்கின்றது என்று யாரும் மறுக்க முடியாது. 

    “எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை” என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றோம். படித்திருக்கின்றோம். பூட்டிய இரும்புக் கூட்டின் கதவை திறந்து, பெண் அடிமைத்தனத்தை தகர்த்து, பெண்களுக்கான சமூக, பொருளாதார விடுதலையை மீட்க எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் முன்வந்தாலும், இருபதாம் நூற்றாண்டில், தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்தான் வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. அதுனால்தான் 1938-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில்’ ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்தார்கள். இன்றைக்கும் ஏழைக் குடும்பங்களையும், கிராமப் பொருளாதாரத்தையும் சுமக்கும் முதுகெலும்பாக பெண்கள்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவருடைய தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது.

    ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று சிலர் சாதாரணமாக சொல்லி விடுவார்கள்.

    ‘உங்கள் மனைவி வேலைக்கு போகிறார்களா?’ என்று கேட்டால், “இல்லை” என்று மட்டும் சொல்லாமல் “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள்” என்று சிலர் சொல்வார்கள். வீட்டில் சும்மாவா நீங்கள் இருக்கிறீர்கள்? வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கின்ற வேலைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மகளிருக்கான உரிமையை கொடுக்கவேண்டும், அவர்கள் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம்தான் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

    தாயின் கருணை! மனைவியின் உறுதுணை! மகளின் பேரன்பு! இவையெல்லாம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால், அதைவிட வேறு செல்வம் தேவையில்லை! உண்மையில்,  உலகை வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும்தான்! என்னுடைய தாய் தயாளு அம்மையார், கருணையே வடிவானவர்கள். சிறிய வயதில் நான் ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால் அன்னைக்கு மழை வரக் கூடாது என்று வேண்டிக்கொள்வார்.

    என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான், தலைவர் கலைஞரிடம் சொல்லச் சொல்வேன். இன்றைக்கு அவர்கள் வயது முதிர்ந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் சென்று பார்க்கின்றபோது என் அம்மா முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது.

    அதேபோலதான் என்னுடைய மனைவி துர்காவும். என்னுடைய பாதி என்று சொல்கின்ற அளவுக்கு என்கூட இருக்கிறார்கள். திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், இயல்பு என்று புரிந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார்கள். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு – பள்ளங்கள்! எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது என்னுடைய மனைவி துர்கா அவர்கள்தான்.

    அடுத்து, என்னோட மகள் செந்தாமரை. அவர்களை அன்பின் வடிவம் என்று தான் சொல்லமுடியும். நான் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று அவர் இருப்பார். ஒரு அரசியல்வாதியினுடைய மகள் என்ற சாயல் தன் மேல் விழுந்துவிடக் கூடாது என்று உன்னிப்பாக அதில் உஷாராக இருப்பார். சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.

    கருணைமிகு தாய் – தூணாக விளங்கும் மனைவி – தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் – இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதே மாதிரியான பேருள்ளம் கொண்டவர்கள்தான் நீங்கள் எல்லோரும்! மகளிர் அனைவரும்! இத்தகைய மகளிரின் நலம் காத்த மாண்பாளர் என்றால் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

    • பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார்.
    • தலைவர் கலைஞர் அளித்த பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை, இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.
    • உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். 

    இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இப்போது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    • ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.
    • ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி கல்வி வரை இலவசக் கல்வியும் வழங்கினார்.
    • ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தார்.
    • டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்
    • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் நினைவு திருமண உதவித்திட்டம்
    • டாக்டர் தருமாம்பாள் நினைவு கைம்பெண் மறுமணத் திட்டம்
    • அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்
    • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்

    இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர்தான் நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவருடைய பெயரில் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது என்பது மிக, மிக, மிகப் பொருத்தமானது. அதுவும் அவருடைய நூற்றாண்டில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

    தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் வகுத்துத் தந்த பாதையில் செயல்படுகின்ற அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மகளிருக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

    விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல்நிதி – கடனுதவிகள் என்று மகளிருக்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

    இது எல்லாவற்றிக்கும் மகுடம் சூட்டக்கூடிய வகையில்தான் இந்தத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இது உங்களுக்கான உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை! மீண்டும், மீண்டும் சொல்லுகிறேன். இது உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை!

    உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரமாக வழங்குகின்ற தொகை. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய  முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் ஏற்கனவே பயன்பெற்று வரும் 39 லட்சத்து 14 ஆயிரத்து 81 பயனாளிகளுக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பெற்று வந்த மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறு ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறேன். இதற்காக, கூடுதலாக 940 கோடி ரூபாய் நிதியை நமது அரசு ஒதுக்கியிருக்கிறது. மொத்தத்தில் பார்த்தால், இன்று  மகளிர் உரிமைத் தொகையை பெறும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் அல்லாமல், உயர்த்தி வழங்கப்படும் ஓய்வூதியம் பெறும் 39 லட்சம் பேரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் தமிழ்நாடு அரசினுடைய மாத ஓய்வூதியத் திட்டங்களால் பயன் பெற்று வருகிறார்கள்.

    நாம் கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இந்தியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும்போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் சந்திக்கின்றபோது நம்முடைய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். விசாரிக்கிறார்கள். தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு நினைக்கிறார்கள்.

    கடந்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு டெல்லியில நடைபெற்றது. அதை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒரு சிறப்பு விருந்து கொடுத்தார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, சில ஒன்றிய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தார்கள். இவை எல்லாம் ஏதோ எனக்கு தனிப்பட்ட கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்களாக நான் கருதவில்லை. தமிழ்நாடு அரசுக்கும், நம்முடைய மக்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகளாகத்தான் நான் கருதுகிறேன்! 

    பசிப்பிணியும் போக்கி வருகிறோம் அறிவுப்பசியையும் தணித்து வருகிறோம். இன்னார் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, இன்னார் உயரவேண்டும், இன்னார் உயரக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்கின்ற திராவிட மாடல் ஆட்சி, கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் பெயரில் உரிமைத் தொகை மூலமாக வழங்கிக் கொண்டு வருகிறோம். பெண்களுக்கு சமூக – பொருளாதார – அரசியல் வலிமையை வழங்குவது.

    என் அருமைச் சகோதரிகளே! உங்கள் சகோதரன் நிறைவாக சொல்ல விரும்புகிறேன்.

    உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது. தொல்லை, இனி இல்லை. வானமே உங்களது எல்லை!

    நன்றி, வணக்கம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments