திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது சட்ட மன்றத்திலும், மாண்புக்குரிய பொறுப்புமிக்க பதவி. ஆனால், மேனாள் முதலமைச்சராக இருந்த ஒருவர், அதனை மக்கள் தீர்ப்பாகவே ஏற்று கடமையாற்ற வரும் போது, அப்பொறுப்பில் பொதுவானவர்கள் மெச்சி, பாராட்டும்படி நடந்து சாதனை சரித்திரம் படைக்கவேண்டும். தமிழ்நாட்டில், சட்டமன்ற வரலாற்றில் அண்ணா, கலைஞர் போன்ற ‘திராவிட மாடல்’ ஆளுமையாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து முத்திரை பதித்துள்ளனர்.
ஆனால், இன்று தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி கே.பழனிசாம, தாம் மேனாள் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற நிலைப்பாட்டைக்கூட மறந்துவிட்டு அல்லது ‘‘துறந்து விட்டு”, இன்றைய முதலமைச்சர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, தமது பதவியின் பொறுப்பை சிறுமையாக்கி விடுகிறார். அப்பதவிக்கும் பெருமை சேர்க்கத் தவறியவராகவே உள்ளார்.
தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்கி, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வெளிநாட்டுத் தொழில்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரும் அரிய பணிக்காக, அண்மையில் சிங்கப்பூர், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பயணமாகி, அங்குள்ள பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரில் அழைப்பு விடுத்துத் திரும்பத் திட்டமிட்டு, (ஒன்றிய அரசு அனுமதியோடு) சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அது, தமிழ்நாட்டின் பொதுநலப் பிரச்சினை, வளர்ச்சிப் பிரச்சினை என்பதைக்கூட ‘வசதியாக’ மறந்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் – முதலமைச்சர் சுற்றுப்பயணத் திட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் – புரிந்துணர்வு ஏற்பாடுகள் எதுபற்றியும் கவலைப்படாமல், சற்றும் பொறுப்பின்றி ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமே முதலீடு செய்யச் செல்லுகிறாரா? முதலீடுகள் செய்வோரை அழைக்கச் செல்லுகிறாரா?” என்று கேள்வி கேட்பதை அரசியல் அறியாமையின் உச்சம் என்றுதானே உலகம் பழிக்கும்? புரிந்துகொள்ளவேண்டாமா?
அரசின் தலைமைச் செயலாளர், தொழில்துறை செயலாளர், மூத்த ஐ.ஏஎஸ். அதிகாரிகள் – மற்ற அதிகாரிகள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் – உடன் சென்றுள்ள நிலை – வெளிப்பாடல்லவா? – முதலமைச்சர் முதலீடு செய்யச் சென்றால், இவர்களையெல்லாம் உடன் அழைத்துச் சென்றுதானா முதலீடு செய்வார்? குறைந்தபட்ச பகுத்தறிவு உள்ளவர்கள் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்களா?
அதுமட்டுமல்ல; எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநர் மாநில ஆட்சி உரிமைக்கு எதிராக நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு போட்டி அரசு போல் நடக்க முயன்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படி நடந்துகொண்டார்? தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினைப் பலப்படுத்தி, தனது கட்சியை அறப்போர் நடத்திட வைத்தார் – கண்டனம் செய்து காப்பாற்றினார்.
பழைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதன்பிறகு தன் அடாவடி நடவடிக்கையை நிறுத்திக் கொண்டார்; அதுபோலவே, சில மசோதாக்களுக்கு (தீர்மானங்கள்) ஆளுநர் நிலைப்பாட்டுக்கு எதிராக ஆட்சியின் கொள் கையளவில் தனது நிலைப்பாட்டை – எதிர்க்கட்சி என்ற தகுதியில், ஆக்கப்பூர்வ ஆதரவும் தந்தாரா, இல்லையா?
ஆனால், ‘‘அண்ணா தி.மு.க.” என்று தங்கள் கட்சியின் பெயர் எதற்கு வைக்கப்பட்டது? என்பதுகூடப் புரியா மல், அண்ணா கொள்கையும் தெரியாது, எம்.ஜி.ஆர். – ஆர்.எஸ்.எஸ்.பற்றி (பா.ஜ.க.பற்றி) எடுத்த நிலைப் பாட்டினையும் அறியாது, ஜெயலலிதா, ‘‘லேடியா – மோடியா?” என்று கேட்டதையும் அலட்சியப்படுத்தி, ‘‘டெல்லி சரணம், சரணம் சரணம்” என்று நெடுஞ்சாணாக சரணம் பாடி, சிதறு தேங்காயாக கட்சியை உடைத்த பா.ஜ.க.விடமே போட்டி போட்டு 3, 4 பிரிவுகளும் – கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, ‘மடியில் கனம்; எனவே, வழியில் பயம்” – முடிவு கட்சியை – கொள்கையை அடமானம் வைத்து, தமது வருமானத்திற்குப் பாதுகாப்புத் தேடும் நிலையில், இப்படிப் பேசுவதா எதிர்க்கட்சித் தலைவர் வேலை?
பா.ஜ.க.வால் பிளக்கப்பட்ட இவர்கள் ஒருவர் மற்றவர்மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை – கொள்ளை களைத் தொகுத்துக் கொடுத்தாலே போதுமே, தனியாக ஏதும் கண்டுபிடிக்க வேண்டியதே இல்லையே?
இனியாவது பொறுப்பை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும், அவரது பல அணியினரும் நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது.

