தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி சர்ச்சை கருத்துகளை சொல்வதை தொழிலாகவே கொண்டுள்ளார். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் விஷத்தை கக்கியுள்ளார்.
திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்றும் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல என்றும் பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை பற்றி பேச இவர் என்ன அரசியல் தலைவரா? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத ஆளுநர் ரவிக்கு,அது குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இருந்தோம். அவர் உடனே ஒப்புதல் அளித்ததால் கண்டனப் போராட்டமாக நடத்தினோம்.
தி.மு.க.வின் கொள்கை என்பது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. மாநில நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிற இயக்கம். ஆனால், ஆளுநர் கூறகிற ஒன்றே பாரதம், ஒரே நாடு என்பது பா.ஜ.க.வின் கொள்கை. இந்தியாவில் அனைத்திலும் ஒற்றைத் தன்மையையும், ஒற்றை ஆட்சியையும் நோக்கமாகக் கொண்டது. மத்தியில் அதிகாரக் குவியலை வளர்க்கிற இயக்கம் பா.ஜ.க. இந்த இரண்டிற்கும் இருக்கிற வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் விதண்டாவாதம் பேசியிருக்கிறார்.
அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார். அனைவரும் ஓரணியில் திரண்டு ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது.