Home செய்திகள் “தமிழ் வளர்த்து நாம் வளர்வோம்..!” டாக்டர் ராமதாஸ்

“தமிழ் வளர்த்து நாம் வளர்வோம்..!” டாக்டர் ராமதாஸ்

0
“தமிழ் வளர்த்து நாம் வளர்வோம்..!” டாக்டர் ராமதாஸ்

 

“வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் உருவாக்கப்பட்ட வணிகர் நாளை கொண்டாடும் வணிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை:

மனித சமூகத்தில் உழவர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தவிர்க்க முடியாதவர்கள் வணிகர்கள். இன்னும் கேட்டால் உழவர்களையும், நெசவாளர்களையும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதன் மூலம் அவர்களை சமூகத்துடன் இணைப்பதும் வணிகர்களே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திரைகடலோடியவர்கள் வணிகர்கள் தான். வணிகர்கள் வருவாய் ஈட்டுவதைக் கடந்து சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அதிகம். கடந்த காலங்களில் அன்னைத் தமிழை கடல் கடந்து பல நாடுகளுக்கு கொண்டு சென்று சேர்த்தவர்களும் வணிகர்கள் தான். பிற நாடுகளுக்கு தமிழை கொண்டு சென்ற வணிகர்கள் உள்நாட்டிற்கும் தமிழைக் கொண்டு வர வேண்டும்; தமிழை வளர்க்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும். அதை நிறைவேற்ற வணிகர்கள் முதலில் தங்களின் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டும். தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்… தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம் என்பது என் மொழி. தமிழ் வளர்த்து நாம் வாழ்வதைக் கடந்து வளரவும் முடியும் என்பதால் வணிகர்கள் தமிழ்க்கடமையை நிறைவேற்ற வேண்டும்.

வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வணிகர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் களைந்து வணிகத்தில் வளர்ச்சியடைய இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here