ஜஸ்பிரித் பும்ரா எப்போது இந்திய அணிக்குத் திரும்புவார் என்ற கேள்விகள் நிலவி வந்த நிலையில், அணிக்குத் திரும்புவதை சூசகமாகத் தெரிவிக்கும் வகையில் பும்ரா காணொளி வெளியிட்டுள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா விளையாடவில்லை. இதனால், டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் என எதிலும் பும்ரா விளையாடவில்லை.
தேசிய கிரிக்கெட் அகாடெமியில் காயத்திலிருந்து மீண்டு வரும் பும்ரா ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்பு முழு உடற்தகுதியுடன் தயாராகிவிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்னதாக அயர்லாந்து டி20யிலும் பும்ரா சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டன.
இந்தத் தகவல்களை உறுதி செய்யும் வகையில் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பந்துவீசும் புகைப்படங்களை காணொளியாக வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் இந்திய கிரிக்கெட் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பைக்கான திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மேற்கிந்தியத் தீவுகள் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த ஆலோசனையின்போது பும்ரா அணிக்குத் திரும்புவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
2022 ஆசியக் கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே மீண்டும் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. ஜனவரியில் இலங்கையுடனான ஒருநாள் தொடரில் பும்ரா இடம்பெற்றார்.
பிறகு, முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிலிருந்தும் விலகினார். ஐபிஎல் 2023-ல் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலும் சேர்க்கப்படவில்லை.