Madras Murasu

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லையா? வேல்முருகன் எச்சரிக்கை

’’தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லையா?  வடமாநில நிறுவனங்களுக்கு, தமிழ்நாட்டின் வேலைகள் தாரைவார்க்கப்படுகிறதா?’’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழ்நாட்டு இளைஞர்கள் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும் போது, ஒப்பந்த நிறுவனங்களிடம் அரசுப் பணிகளை ஒப்படைப்பதா? தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தர பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், நடத்துநர் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சுமார் 1,797 நடத்துநர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது மட்டுமின்றி, அதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வேலைக்காக பதிவு செய்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கும்போது, அவர்களைப் புறக்கணித்துவிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏன்?
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தரவின்படி, 31.03.2025 நிலவரப்படி 32,35,683 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.  இந்த 32 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் நடத்துநர் பணிக்கு தகுதியானவர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் போக்குவரத்துக் கழக வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய கல்வித் தகுதியையும் வயதையும் பதிவு செய்து, அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை அரசே சிதைப்பது நியாயமா? இது தவிர, பதிவு செய்யப்படாமல் கல்லூரிகளில் படித்துவிட்டு வேலைகளுக்காக காத்திருக்க கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருப்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டதா?
ஒருபுறம் வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்று விளம்பரம். மறுபுறம் ஏற்கெனவே உள்ள அரசு பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை. இது எந்த மாதிரியான நிர்வாகக் கொள்கை? இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பயன்படுமா?
தமிழ்நாட்டு இளைஞர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணிப்பது ஏன்?
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை இல்லை. தனியார் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசு வேலை இருக்கிறதா? அது எப்படி?
இந்த முரண்பாட்டைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு அரசு துறைகள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வரிப்பணத்தால் உருவாக்கப்படும் அரசு நிறுவனங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் இயங்கும் பொதுத்துறை அமைப்புகளிலும் கிடைக்கும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் குடிகளுக்கே முழுமையான முன்னுரிமை இருக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
இது யாரையும் வெறுப்பதற்கான நிலைப்பாடு அல்ல. தமிழ்நாட்டின் வளம், வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டின் குடிகளுக்குள்ள உரிமையை பாதுகாப்பதற்கான கொள்கை நிலைப்பாடு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர், ஓட்டுநர் போன்ற அடிப்படைப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை மட்டுமல்ல. எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தையே தனியார் மயமாக்குவதற்கான பாதையைத் திறக்கும் அபாயகரமான நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்கள் பணியாளர் பற்றாக்குறை, பணிச்சுமை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல் ஒப்பந்த முறையை விரிவுபடுத்துவது தொழிலாளர் நலனுக்கு எதிரானது. தொழிற்சங்கங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த நடவடிக்கையை தொடர்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகக் கடுமையாக கண்டிக்கிறது.
எனவே தமிழக அரசு, 1,797 நடத்துநர் பணிகளுக்கான உத்தரபிரதேச நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்த முறையை உடனடியாக கைவிட வேண்டும்.
காலியாக உள்ள அனைத்து நிரந்தர பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் தகுதியான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுத்துறை பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்த நிறுவனங்களின் கைகளில் தள்ளும் முயற்சியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
32 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவாளர்களின் எதிர்காலத்தைப் புறக்கணித்துவிட்டு, அரசுப் பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் போக்கைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், இது வெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினையாக மட்டும் நின்றுவிடாது. தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும். தமிழ்நாட்டின் அரசுப் பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் எந்த முயற்சியையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
தமிழ்நாட்டின் அரசுப் பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் குடிகளுக்கு 100% வழங்கப்பட வேண்டும்; வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’’ என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
Scroll to Top