Madras Murasu

’’ ஜோசப் விஜய் 100 நாள் முதலமைச்சர்..!’’ மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார்..?

தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்று 100 நாள் ஆகிறது. அதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் த இந்து நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தியாகராஜன் எழுதியுள்ள கட்டுரை அப்படியே தரப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ட் 17-ஆம் தேதி 100-வது நாளை எட்டும் த வெ க அரசைப் பற்றியான எனது (Ramakrishnan Thyagarajan-Journalist) கருத்து:
நிறைகள்:
1) தமிழகத்தின் முதல் கூட்டணி அமைச்சரவை த வெ க அரசு.
காமன்வீல் கட்சியின் தலைவரான மாணிக்கவேலு நாயக்கர் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் 1952-ல் சேர்ந்தபிறகு, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகிவிட்டார்.
2)அமைச்சரவை அமைப்பதிலோ அதற்குப் பிறகோ தொடக்கநிலைத் தொல்லைகள் ஒன்றும் இல்லை
ஒப்பீட்டிற்காக, இரண்டு உதாரணங்களை கொடுக்கிறேன்:
கேரளத்தில், யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு 141-ஆண்டு-வருட காங்கிரஸ் கட்சிக்கு 10 நாட்கள் தேவைப்பட்டது
(மே 4 – முடிவுகள். மே – 14 வீ டி சதீசன்)
கர்நாடகத்தில், டி கே சிவக்குமார் முதல்வரான பிறகு அவருடைய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு
இரண்டு மாதங்கள் அதே கட்சிக்கு தேவைப்பட்டது.
அப்படியும் அதிருப்தி சிலரிடம் இருந்தது.
ஆனால், இம்மாதிரியான பிரச்சினைகள் – கட்சிக்குள்ளாகவோ கூட்டணிக் கட்சிகளுடனோ – த வெ க-தலைமையிலான அமைச்சரவையில் இல்லை.
3)பட்டியலின சாதிகளிலிருந்து எட்டு பேர் அமைச்சர்களாக உள்ளனர். இது தமிழகத்தில் முதன்முறை நிகழ்ந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில்் பட்டியிலனத்தினரான சஞ்சீவய்யா 1960-லியே முதல்வராக முடிந்தது. தமிழ்நாட்டில் அம்மாதிரியான நிகழ்வு நடைபெறுவதற்கு இன்னமும் எவ்வளவு ஆண்டுகள் தேவைப்படுமோ தெரியாது. இருப்பினும். இந்த அளவிற்கு பட்டியலின சாதிகளில் இருப்பவர்களுக்கு பிரதி நிதித்துவம் கொடுத்தது ஒரு சாதனை. சென்ற தி மு க அமைச்சரவையில் நால்வர் பட்டியலினத்தனர்.
அதே சமயத்தில் கடந்த 70 ஆண்டுகளில் நிகழாத ஒன்றும் தமிழகத்தில் நடைபெற்றுளளது. இரண்டு பிராமணர்களைக் கொண்ட அமைச்சரவையாகவும் த வெ க -தலைமையிலான அரசு அமைந்துள்ளது.
4) பெரும்பாலான அமைச்சர்களுக்கு மரபுவழிப் பிரச்சினைகள் – இல்லை. ஆகவே, அரசின் செயல்பாட்டில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் சீரமைப்பு (அ) மாற்றங்கள் செய்வதில் அதிக இடர்பாடுகள் (அ) அழுத்தங்கள் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
5) முதல்வர் தலைமைசெயலகத்திற்கு தினம் காலை 9 (அ) 10 மணிக்கு வந்துவிடுவதும் மாலை 5 மணி வரை இருப்பதும் ஒரு நல்ல பழக்கம். இதனால், தலைமைசெயலகத்தில் பணி புரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர் குறித்த நேர்த்திற்கு வந்துவிடுகிறார்கள். இதுவும் ஒரு நல்ல அறிகுறி.
6) பொதுமக்களுடன் தொடர்பு அதிமாக உள்ள துறைகளில், ஊழல் இல்லை (அ) குறைந்துவிட்டது என்கின்ற கருத்து பரவலாக உள்ளது. இது தொடரவேண்டும். நிரந்தரமான அம்சமாக மாறவேண்டும்.
குறைகள்:
1)தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது என்பதை அவ்வப்பொழுது கூறிக்கொண்டிருக்கும் இந்த அரசு முதலமைச்சரின் அலுவலகத்திற்கு மாற்று இடத்தில் வைப்பதற்கான செலவை செய்து கொண்டிருக்கிறது. அதேப்போல, தலைமைச்செயலகம் மாற்றப்பட உள்ளது என்பதைப் போன்ற செய்திகளும் வருகின்றன. இவையெல்லாம் தற்பொழுதைய நிதி நிலமைக்கேற்ற நடவடிக்கைகள் அல்ல!
2) சமூக வலைத்தளத்தில் மிகவும் பரவலாக இருப்பதாக தெரிந்தாலும் இந்த அரசிடம் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் குறைவாக உள்ளது. சில விளக்கங்களை கேட்பதறகாக மூன்று அமைச்சர்களை – திரு நிர்மல் குமார், திரு வெங்கடரமணன் மற்றும் திரு ரமேஷ் – தொலைப்பேசியின் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன். “வாட்ஸ் ஆப்”-யில் எழுத்து மூலமாக எனது காரணத்தை விளக்கியிருந்தேன். எதற்கும் பதில் இல்லை. இது வரை, ஒரு முறை முதலமைச்சர் ஜோசப் விஜய் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை. நான் ஆச்சரியமும் படவில்லை. இது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற பிரச்சினைகளை அலட்சியப்படுத்துகின்ற போக்கும் உள்ளது.
இரண்டு எடுத்துக்காட்டுகளை கூறலாம்:
ஒன்று, திமுக உட்ப பல கட்சிகள் த வெ க-வின் முதல் அமைச்சரவைக்கூட்டத்தில் முதல்வரின் இரண்டு ஆலோசகர்கள் கலந்துகொண்டார்கள் என்று குற்றம் சாட்டியபொழுது, அதற்கு எந்தப்பதிலையும் அரசின் செய்தித்தொடர்பாளர்கள் போன்று செயல்படுபவர்கள் பதிலே கூறவில்லை. அமைச்சரவையில் வி சி க-யின் பிரதி நிதியாக இருக்கின்ற சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு, “தி ஹிந்து”-விற்கு சமீபத்தில் கொடுத்த நேர்காணலில், இந்தப் பிரச்சினையைப்பற்றியான கேள்வி கேட்டபொழுது, அதை மறுத்துள்ளார்.
இரண்டாவது, முதல்வர் விஜய் கர்நாடகத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம். சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி விளக்கம் கொடுத்த முதல்வர், முன்னமேயே இதைப்பற்றி அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கலாம். ஏனெனில், அவருடைய அமைச்சர்கள் மத்தியிலேயே ஒரே குரலில் இதைப்பற்றியான கருத்துகளை கூறவில்லை.
3) விமர்சனங்கள் கடுமையாக உள்ளது என்ற எண்ணம் வரும்பொழுதெல்லாம் அம்மாதிரியான கருத்துகளை கூறுப்வர்களை கைதுசெய்வது (அ) போலிஸ் நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை முந்தைய ஆட்சியாளர்கள் எல்லாம் செய்ததுதான். அதையே இந்த ஆட்சியினரும் திருப்பிசெய்கிறார்கள் என்கின்ற எண்ணம் பெருகிக் கொண்டிருக்கிறது.
4) அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $ 1.5 டிரில்லியனாக உயர்வேண்டும் என்பதைத் தவிர எம்மாதிரியான தொலைநோக்குத்திட்டங்களை வைத்துள்ளது; அவற்றை எவ்வாறு அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது என்பதற்கான எந்த விவாதத்தையும் இந்த அரசு இதுவரை நடத்தவில்லை. நடத்தவும் முன்வரவில்லை.
5) தோழமைக்கட்சிகளை உள்ளடக்கி ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை இது வரை த வெ க அமைக்கவில்லை. அரசின் நிதிநிலமை நன்றாக இல்லை என்பதனால் பல சீர்திருத்தங்களை அரசு செய்ய முனையும்பொழுது தோழமைக்கட்சிகளை கலந்தாலோசிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. த வெ க தனக்கு இன்னமும் தனிப்பெரும்பான்மையை பெறாத நிலையில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
நன்றி : Journalist – Ramakrishnan Thyagarajan
Scroll to Top