உலகிலேயே இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ள நான்கு பருத்தி வகைகளையும் பயிரிடும் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இதில் ஆசியப் பருத்தி, அமெரிக்க மேட்டுநிலப் பருத்தி, எகிப்தியப் பருத்தி ஆகிய ரகங்கள் அடங்கும். பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிரான பிடி பருத்தி ரகங்கள் சாகுபடிச் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வழிவகை செய்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பருத்தி சாகுபடிப் பரப்பளவான 114.84 லட்சம் ஹெக்டேரில், சுமார் 62 சதவீதப் பகுதி மழையை நம்பியே பயிரிடப்படுகிறது. இந்தியாவில் பருத்தி உற்பத்தியானது பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 9 முக்கிய மாநிலங்களில் பெருமளவில் நடைபெறுகிறது. இவற்றுடன் ஒடிஷா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

பருத்தி சாகுபடித் திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும் 5,659.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம்’ 2025-26 நிதியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பருத்தி உற்பத்தியை வரும் 2031-ம் ஆண்டிற்குள் 498 லட்சம் மூட்டைகளாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பருத்தி சிறப்புத் திட்டத்தின் மூலம் அதிக அடர்த்தி கொண்ட நடவு முறை, நெருக்கமான நடவு முறை ஆகிய நவீனத் தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களாக விவசாயிகளுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
பருத்தி கொள்முதல் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் ‘கபாஸ் கிசான்’ என்ற புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 41 லட்சம் விவசாயிகள் தங்களின் ஆதார் விவரங்களுடன் முன்பதிவு செய்து, இடைத்தரகர்களின்றி நேரடியாகப் பயன் அடைந்து வருகின்றனர். உலகச் சந்தையில் இந்தியப் பருத்தியின் தரத்தை மேம்படுத்தித் தனி முத்திரையைப் பதிக்கும் நோக்கில் 30 கோடி ரூபாய் மதிப்பில் ‘கஸ்தூரி காட்டன் பாரத்’ என்ற பிராண்டிங் திட்டம் ஜவுளி அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாகப் பருத்தியின் தூய்மையையும் தரத்தையும் உறுதி செய்கிறது. இத்தகைய விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடுகள், டிஜிட்டல் ஆளுகை நடவடிக்கைகள் ஆகியவை பருத்தித் துறையை நவீனமயமாக்கி, தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு வலு சேர்க்கின்றன.
