Madras Murasu

மனைவியை பிரிவதாக அறிவித்தார் பவன் கல்யாண்!

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவைப் பிரிவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பவன் கல்யாணும், அன்னாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை ஒன்றாகக் கழித்த நிலையில், பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருமண உறவு முடிவுக்கு வந்தாலும், நல்ல நண்பர்களாகவும், குழந்தைகளுக்குப் பொறுப்பான பெற்றோர்களாகவும் தொடர்ந்து இருப்போம் என்றும், குழந்தைகளின் மகிழ்ச்சியும் நலனுமே தங்களது முதன்மையான முன்னுரிமை என்றும் குறிப்பிட்டுள்ளனர். தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்து, தனியுரிமையைப் பாதுகாக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்தது!

பவன் கல்யாண் கடந்த 1997ஆம் ஆண்டு நந்தினி என்பவரைத் திருமணம் செய்தார். இந்தத் திருமணம் 2008ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. பின்னர் நடிகை ரேணு தேசாயை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கையும் 2012ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வருவதாக இருவரும் அறிவித்திருப்பது தெலுங்குத் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top