மாநிலங்கள் அளவில் 5.74 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவுடன் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. பிகார் மாநிலத்தில் 3.46 லட்சத்திற்கும் அதிகமானோரும், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தலா 2.5 லட்சத்திற்கும் அதிகமானோரும், சத்தீஸ்கரில் 2 லட்சத்திற்கும் அதிகமானோரும் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். ஒடிசா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இத்திட்டம் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 1,10,669 விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பலன் பெற்று வருகின்றனர்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்ஐசி) இணைந்து நிர்வகிக்கப்படுகிறது. 2 ஹெக்டேர் வரை சாகுபடி நிலம் வைத்துள்ள 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பதிவு செய்துள்ள விவசாயி காலமானால், அவரது வாழ்க்கைத் துணைக்கு 50 சதவீதத் தொகையான ரூ.1,500 குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். 60 வயதை எட்டுவதற்கு முன்பே விவசாயி உயிரிழக்க நேரிட்டால், அவரது வாழ்க்கைத் துணை தொடர்ந்து பங்களிப்புத் தொகையைச் செலுத்தித் திட்டத்தைத் தொடரலாம் அல்லது திட்ட விதிகளின்படி விலகிக்கொள்ளலாம்.
விவசாயி செலுத்தும் அதே சமமான தொகையை மத்திய அரசும் ஓய்வூதிய நிதியில் செலுத்தும் பங்களிப்பு முறையை இத்திட்டம் கொண்டுள்ளது. திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்து விவசாயிகளின் மாதாந்திரப் பங்களிப்புத் தொகை ரூ.55 முதல் ரூ.200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதில் சேருபவர் மாதம் ரூ.55-ம், 40 வயதில் சேருபவர் மாதம் ரூ.200-ம் செலுத்த வேண்டும்; மத்திய அரசும் அதற்கு இணையான தொகையை வழங்கும். விவசாயிகள் தங்களுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியுதவியிலிருந்தே இப்பங்களிப்புத் தொகையைத் தானியங்கி முறையில் பிடித்தம் செய்துகொள்ளும் வசதியையும் தேர்வு செய்யலாம்.

சட்டப்பூர்வ ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவோர், பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன், லகு வியாபாரி மான்தன் திட்டப் பயனாளிகள் இதில் சேர முடியாது. அரசியலமைப்புப் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பதிவு செய்யப்பட்ட தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரும் இத்திட்டத்தில் சேர இயலாது.
விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்கள் மூலம் எளிமையாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் கொண்டு இந்த செயல்முறையை எளிதில் மேற்கொள்ளலாம். பதிவு நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு பிரத்யேக ஓய்வூதியக் கணக்கு எண்ணுடன் கூடிய ஓய்வூதிய அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு முறைகளிலும் பங்களிப்புத் தொகையைச் செலுத்தலாம். விவசாயிகளின் உழைப்புக்கு கௌரவமளித்து, அவர்களின் முதுமைக்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதில் பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் பார்க்க வேண்டிய இணையதளம் https://pmkisan.gov.in/ . இத்தளத்தில் கூடுதல் விபரம் தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்யலாம்.
