Madras Murasu

கடற்படைக் கப்பல் சுதர்ஷினி இத்தாலியில் இருந்து புறப்பட்டது

இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, இத்தாலியின் லிவோர்னோ துறைமுகத்தில் இருந்து 2026 செப்டம்பர் 12 அன்று புறப்பட்டது. அங்கு தங்கியிருந்த காலத்தில், இந்தியா, இத்தாலி நாடுகளுக்கு இடையிலான நட்புறவையும், கடல்சார் கூட்டுறவையும் வலுப்படுத்தும் வகையில், பல்வேறு தொழில்முறை கலந்துரையாடல்களிலும், பரஸ்பர பயிற்சிப் பரிமாற்ற நிகழ்வுகளிலும்  ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் பங்கேற்றது.

 

இத்தாலிய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் கியூசெப்பே பெரூட்டி பெர்கோட்டோ, ஐஎன்எஸ் சுதர்ஷினியைப் பார்வையிட்டு, அதன் பணியாளர்கள், பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். ஐஎன்எஸ் சுதர்ஷினியின் கமாண்டிங் அதிகாரி, இத்தாலிய கடற்படை அகாடமியின் தளபதியான ரியர் அட்மிரல் ஆல்பர்டோ டராபோட்டோவைச் சந்தித்து, பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

பயிற்சிப் பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக, இந்தியக் கடல் பயிற்சியாளர்கள் ஐஎஸ்டிஎஸ் வர்ஜினியோ ஃபசான் மற்றும் இத்தாலியக் கடற்படை அகாடமியைப் பார்வையிட்டனர். அதே நேரத்தில், இத்தாலியக் கடற்படை வீரர்கள் ஐஎன்எஸ் சுதர்ஷினியைப் பார்வையிட்டு, தொழில்முறை ஒத்துழைப்பையும் பரஸ்பரப் புரிதலையும் வளர்த்தனர். கப்பலில் நடைபெற்ற  ஒரு வரவேற்பு நிகழ்ச்சியில், மூத்த இத்தாலியக் கடற்படை அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகள், தூதரகப் பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

லோக்காயன் 2026 பயணத்தின்போது,  ஐஎன்எஸ் சுதர்ஷினி, கடல்சார் கூட்டாண்மையின் உணர்வையும், ‘பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம்’ என்னும் ‘மகாசாகர்’ தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்கிறது.

Scroll to Top