
உலகளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சாகுபடி பரப்பளவில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, உலக உற்பத்தியில் 31.24 சதவீதத்தையும், உலகளவில் சாகுபடி பரப்பில் 17.90 சதவீதத்தையும் கொண்டுள்ளது. 2024-25-ம் ஆண்டில் 21.9 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சுமார் 2,03,012 லட்சம் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கேரளத்தில் அதிக பரப்பளவில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. ஆந்திரப் பிரதேசம் உற்பத்தித் திறனில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் தேங்காய்ப் பொருட்களின் ஏற்றுமதி ரூ.7,038.35 கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.4,349.03 கோடியாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பு ரூ.3,236.83 கோடியிலிருந்து ரூ.7,038.35 கோடியாக உயர்ந்துள்ளது. பாரம்பரியப் பொருட்களைத் தாண்டி செக்கில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், இளநீர், உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தற்போது உலகச் சந்தையை சென்றடைந்துள்ளன. அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி, பெல்ஜியம், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகியவை முக்கிய வர்த்தக நாடுகளாக உள்ளன.

தேங்காய் சார்ந்த துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னை மேம்பாட்டு வாரியம், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தரமான நாற்றுகள் உற்பத்தி, புதிய பகுதிகளில் சாகுபடி விரிவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாடு, பூச்சி, நோய்க் கட்டுப்பாடு, மதிப்பு கூட்டல், சந்தை மேம்பாடு ஆகியவற்றில் இந்த வாரியம் முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது. 2025-26-ம் ஆண்டில் சுமார் 2,175 ஹெக்டேர் புதிய பரப்பில் தேங்காய் சாகுபடி விரிவுபடுத்தப்பட்டது. 1,672 ஹெக்டேர் பரப்பில் பழைய தோப்புகள் புனரமைக்கப்பட்டன.
தென்னை விவசாயிகளுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஆதரவு விலை, தரமான நடவுப் பொருள் வழங்கல், நீர்வள உருவாக்கம், இயற்கை வேளாண்மை, பண்ணை இயந்திரமயமாக்கல், மறுநடவு, புத்துயிரூட்டல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2026-ம் ஆண்டு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, அரவை கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.12,027 ஆகவும், உருண்டைக் கொப்பரைக்கு ரூ.12,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2026-27-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேங்காய் மேம்பாட்டுத் திட்டம், பூச்சித் தாக்குதல், வேர்வாடல் நோய், பழைய தோப்புகள் உள்ளிட்டவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. தரமான நாற்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்தல், புதிய பகுதிகளில் சாகுபடியை விரிவுபடுத்துதல், பழைய தோப்புகளில் படிப்படியாக மறுநடவு செய்தல், பயிர் நல மேலாண்மையை வலுப்படுத்துதல், ஒருங்கிணைந்த தேங்காய் பதனப்படுத்தும் அலகுகளை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
திறன் மேம்பாட்டிலும் தென்னை வளர்ச்சி வாரியம் கவனம் செலுத்துகிறது. தென்னை மரம் ஏறுதல், கைவினைப் பொருள் தயாரிப்பு போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தென்னை விவசாயிகள் ஒருங்கிணைப்பு, மதிப்பு கூட்டல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் தேங்காய்த் துறை பாரம்பரிய வாழ்வாதாரத் தளத்திலிருந்து உலகளாவிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக வளர்ந்து வருகிறது.
