77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:
நமது 77வது சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது நம் அனைவருக்கும் புகழ்வாய்ந்த நன்னாளாகும். ஏராளமான மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நகரங்களிலும், கிராமங்களிலும், இந்தியாவின் எல்லா இடங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும், நமது சுதந்திர தின விழாவைக் கொண்டாட தயாராகி வருவது பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகும். சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை மக்கள் மகத்தான ஆர்வத்துடன் கொண்டாடிவருகிறார்கள்.
தேசபக்திப் பாடல்கள்..!
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எனது குழந்தைப் பருவ நாட்களை நினைவூட்டுகின்றன. எங்களின் கிராமப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற உற்சாகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது எங்களில், மெய்சிலிர்ப்பு ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம். எங்கள் இதயங்களில் முழுமையான தேசபக்தப் பெருமிதத்துடன், தேசியக் கொடிக்கு நாங்கள் வணக்கம் செலுத்தி, தேசிய கீதம் பாடினோம். இனிப்புகள் வழங்கப்பட்டு, தேசபக்தப் பாடல்கள் பாடப்பட்டன. இவை எங்களின் மனங்களில் பல நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்தன. நான் ஒரு பள்ளி ஆசிரியரானபோது, இந்த அனுபவங்களை மீண்டும் பெறும் வாய்ப்பைப் பெற்றது என் அதிர்ஷ்டமாக இருந்தது.
நாம் வளரும்போது, குழந்தைகளாக நாம் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் தேசிய விழாக்களைக் கொண்டாடுவதுடன் தொடர்புடைய தேசபக்த உணர்வின் தீவிரம் எப்போது குறையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் வெறுமனே தனிநபர்கள் அல்ல. மகத்தான மக்கள் சமூகத்தின் ஒரு பகுதி என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த சமூகம், மிகப்பெரியதாகவும், மகத்தானதாகவும் விளங்குகிறது. இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமக்களைக் கொண்ட சமூகமாகும்.
இந்தியா ஜனநாயகத்தின் தாயகம்..!
நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது மகத்தான ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்ற உண்மையை கொண்டதாகும். சாதி, மதம், மொழி மற்றும் பிராந்தியத்தைத் தவிர, நம் ஒவ்வொருவருக்கும் பல அடையாளங்கள் உள்ளன. நாம், நமது குடும்பங்கள் மற்றும் தொழில்களுடனும் அடையாளம் காணப்படுகிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் அடையாளம் உள்ளது. அதுதான் இந்தியக் குடிமக்கள் என்ற நமது அடையாளம். இந்த நாட்டில் நாம் ஒவ்வொருவரும் சமத்துவமான குடிமக்கள்; நாம் ஒவ்வொருவரும் சம வாய்ப்பை, சம உரிமைகளை, சமமான கடமைகளைப் பெற்றிருக்கிறோம்.
ஆனால் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. இந்தியா ஜனநாயகத்தின் தாயகமாகும். பண்டைக் காலத்திலிருந்தே நாம் அடித்தளநிலையில் ஜனநாயக அமைப்புகளைக் கொண்டிருந்தோம். ஆனால் நீண்டகால காலனிய ஆட்சி அவற்றை அழித்துவிட்டது. 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்த தேசம் ஒரு புதிய விடியலுடன் விழித்தெழுந்தது. நாம் அந்நிய ஆட்சியிலிருந்து மட்டும் விடுதலைப் பெறவில்லை. நமது நிலையை மாற்றி எழுதும் சுதந்திரத்தையும் பெற்றோம்.
புகழ்மிக்க முன்னுதாரணம்..!
நமது சுதந்திரத்துடன் அந்நிய ஆட்சியாளர்கள் பல காலனி நாடுகளில் இருந்து வெளியேறும் சகாப்தம் தொடங்கியது. காலனித்துவம் அதன் முடிவை நெருங்கியது. நமது சுதந்திரப் போராட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் நோக்கம் நிறைவேறியது மட்டுமின்றி, எவ்வாறு போராடப்பட்டது என்பதும்தான். மகாத்மா காந்தி தலைமையின் கீழும், அசாதாரண தொலைநோக்குப் பார்வை கொண்ட எண்ணற்ற தலைவர்களின் கீழும், நமது தேசிய இயக்கம் தனித்துவமான லட்சியங்களால் உத்வேகம் பெற்றது. காந்திஜியும் மற்றவர்களும் இந்தியாவின் ஆன்மாவைத் தூண்டியதோடு, தேசம் தனது நாகரிக மதிப்புகளை மீண்டும் கண்டறிய உதவினர். நமது எதிர்ப்பின் திருப்புமுனையாக அமைந்த, ‘வாய்மையும் அகிம்சையும்’ என்ற இந்தியாவின் புகழ்மிக்க முன்னுதாரணம் உலகெங்கிலும் உள்ள பல அரசியல் போராட்டங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
பெண்கள் நாட்டின் வளர்ச்சி..!
சுதந்திர தின விழாவையொட்டி, அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்துவதில் எனது சக குடிமக்களுடன் நானும் இணைகிறேன். அவர்களின் தியாகங்கள் உலக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உரிய இடத்தை மீண்டும் பெறுவதை சாத்தியமாக்கின. பாரத மாதாவுக்காக, மதாங்கினி ஹஸ்ரா, கனக்லதா பரூவா போன்ற மகத்தான சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். சத்தியாகிரகத்தின் கடினமானப் பாதையின் ஒவ்வொரு தடத்திலும் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு இணையாக அன்னை கஸ்தூர்பா இருந்தார்.
சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், ரமா தேவி, அருணா ஆசஃப் அலி, சுச்சேதா கிருபளானி போன்ற பல மகத்தான பெண் தலைவர்கள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் தன்னம்பிக்கையுடன் சேவை செய்ய எதிர்காலப் பெண் சந்ததிகளுக்கு உத்வேகமூட்டும் லட்சியங்களை அளித்துள்ளனர். பெண்கள் இன்று நாட்டின் வளர்ச்சி மற்றும் சேவையின் ஒவ்வொரு துறையிலும் விரிவான பங்களிப்பை செய்து, நாட்டின் பெருமையை உயர்த்தி வருகின்றனர். சில தசாப்தங்களுக்கு முன் கற்பனை செய்து பார்க்க இயலாத பல துறைகளில் இன்று நமது பெண்கள் தங்களுக்கு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்..!
நமது நாட்டில் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பொருளாதார அதிகாரமளித்தல், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் நிலையை வலுப்படுத்துகிறது. பெண்கள் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்குமாறு குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நமது சகோதரிகளும், மகள்களும் தைரியமாக சவால்களை சமாளித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்தின் லட்சியங்களில் ஒன்றாக பெண்களின் மேம்பாடு இருந்தது.
சுதந்திர தினம் என்பது நமது வரலாற்றோடு மீண்டும் இணைவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். நமது நிகழ்காலத்தை மதிப்பிடுவதற்கும், நமது முன்னோக்கிய பாதையைப் பற்றி சிந்திப்பதற்குமான சந்தர்ப்பமும் ஆகும். தற்போதைய நிலையைக் காணும்போது, உலக அரங்கில் இந்தியா தனது சரியான இடத்தை மீண்டும் பெற்றிருப்பது மட்டுமின்றி, சர்வதேச அளவில் தனது நிலையை மேம்படுத்தியும் இருக்கிறது. இந்திய வம்சாவளியினருடனான எனது சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் போது, இந்திய வளர்ச்சியில் ஒரு புதிய நம்பிக்கை இருப்பதை நான் கவனித்தேன். உலகெங்கிலும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்வதேச அமைப்புகளில், குறிப்பாக ஜி-20 நாடுகளின் தலைமைத்துவத்தை அது ஏற்றுள்ளது.
மனிதகுல மேம்பாடு..!
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினை ஜி-20 பிரதிநிதித்துவம் செய்வதால், உலகளாவிய உரையாடலை சரியான திசையில் வடிவமைக்க உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இது உள்ளது. ஜி-20 தலைமைத்துவத்துடன், வர்த்தகம் மற்றும் நிதித் துறையில் முடிவுகள் எடுப்பதில் சமமான முன்னேற்றத்தை நோக்கி இந்தியாவை நகர்த்த முடியும். வர்த்தகம் மற்றும் நிதிக்கு அப்பால், மனிதகுல மேம்பாடு தொடர்பான விஷயங்களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. பூகோள எல்லைகளால் வரையறுக்கப்படாத, அனைத்து மனிதகுலம் சம்பந்தப்பட்ட, உலகளாவிய பல பிரச்சனைகள் உள்ளன. உலகளாவிய பிரச்சனைகளைக் கையாள்வதில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவத்துடன், உறுப்பு நாடுகள் இந்த விஷயங்களில் பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த ராஜிய ரீதியான நடவடிக்கை அடித்தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகும். மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்க முதன் முறையாக இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதையும், ஜி -20-ன் கருப்பொருட்களை அறிந்துகொள்வதையும் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஜி-20 தொடர்பான நிகழ்வுகளில் அனைத்துக் குடிமக்களும் ஆர்வமாக உள்ளனர்.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவோம்..!
அதிகாரமளித்தல் உணர்வுடன் இந்த உற்சாகம், சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் தேசம் அனைத்து முனைகளிலும் பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் கொந்தளிப்பான காலங்களில் நெகிழ்ச்சியுடன் இருப்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயைத் தொடர்ந்து சர்வதேச நிகழ்வுகள் நிச்சயமற்ற நிலையை அதிகரித்துள்ளதால், உலகப் பொருளாதாரம் ஒரு சிக்கலான கட்டத்தைக் கடந்து வருகிறது. ஆனாலும், கொந்தளிப்பான சூழலை மிகச் சிறப்பாக அரசால் கையாள முடிகிறது. இந்தியா, சவால்களை வாய்ப்புகளாக மாற்றி அதிக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி-ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நமக்கு உணவளிக்கும் அன்னதாதாக்களான விவசாயிகள் நமது பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு தேசம் கடன்பட்டிருக்கிறது.
உலகளாவிய பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அரசும், ரிசர்வ் வங்கியும் அதைக் கட்டுப்படுத்தியுள்ளன. அதிக பணவீக்கத்திலிருந்து சாமானிய மக்களைப் பாதுகாப்பதிலும், ஏழைகளுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குவதிலும் அரசு வெற்றி கண்டுள்ளது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ளன.
பாரம்பரியத்தை வளப்படுத்த வேண்டும்..!
தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் இருமுனை உத்தியால் இயக்கப்படுகிறது. ஒருபக்கம் தொழில் செய்வதை எளிதாக்குவதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் நிறுவன சக்திகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு தொடர்ச்சியான உந்துதல் உள்ளது; மறுபக்கம், பல்வேறு துறைகளில் தேவைப்படுவோருக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் விரிவாக்கப்பட்ட நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது எங்கள் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. இது கடந்த தசாப்தத்தில் ஏராளமான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது. அதேபோல், பழங்குடியினரின் நிலையை மேம்படுத்தவும், முன்னேற்றப் பயணத்தில் சேர அவர்களை ஊக்குவிக்கவும் குறிப்பிடத்தக்க திட்டங்கள் உள்ளன. நமது பழங்குடி சகோதர சகோதரிகள், நவீனத்துவத்தை தழுவும் அதேவேளையில் தங்கள் பாரம்பரியத்தையும் வளப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார முன்னேற்றம்..!
பொருளாதார வளர்ச்சியுடன், மனித மேம்பாடு சம்பந்தப்பட்டவற்றுக்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியராகவும் இருந்துள்ள நான், சமூக மேம்பாட்டிற்கான மிகப்பெரிய கருவி கல்வி என்பதை உணர்ந்துள்ளேன். தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள கல்வியாளர்களுடனான எனது தொடர்புகளிலிருந்து, கற்றல் செயல்முறை மிகவும் நெகிழ்வானதாக மாறியுள்ளது என்பதை நான் அறிகிறேன்.
பண்டைய விழுமியங்களை நவீனத் திறன்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தொலைநோக்கு கொள்கை, கல்வித் துறையில் பல ஆண்டுகளாக இல்லாத மாற்றங்களைக் கொண்டு வரும்; நாட்டில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அதன் மக்களின், குறிப்பாக இளம் தலைமுறையினரின் கனவுகளால் இயக்கப்படுகிறது, அவர்களுக்கு எல்லையற்ற வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் முதல் விளையாட்டு வரை, நமது இளைஞர்கள் சிறந்து விளங்குவதற்கான புதிய எல்லைகளைக் கண்டறிந்துள்ளனர்.
நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது..!
புதிய இந்தியாவின் விருப்பங்கள் எல்லையற்ற பரிமாணங்களைக் கொண்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி, சிறந்து விளங்குகிறது. இந்த ஆண்டு, இஸ்ரோ சந்திரயான்-3 ஐ செலுத்தியுள்ளது. ‘விக்ரம்’ என பெயரிடப்பட்டுள்ள லேண்டர், ‘பிரக்யான்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரோவர் ஆகியவை அடுத்த சில நாட்களில் நிலவில் தரையிறங்க உள்ளன. இது நம் அனைவருக்கும் பெருமிதம் கொள்ளும் தருணமாக இருக்கும், நான் அதை எதிர்நோக்கி இருக்கிறேன். நிலவுக்கான நமது பயணம் எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கான ஒரு படிக்கட்டு மட்டுமே. நாம் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
விண்வெளியிலும், பூமியிலும் நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்களின் பணிகளால் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, தொழில் முனைவு உணர்வை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.50,000 கோடி செலவில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளை நமது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சியையும், மேம்பாட்டையும் விதைக்கும், வளர்க்கும், ஊக்குவிக்கும்.
சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி..!
நம்மைப் பொறுத்தவரை அறிவியலோ, அறிவோ முடிவானதல்ல, அனைத்து மக்களின் நலனுக்கான சாதனங்கள் மட்டுமே. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் உடனடி கவனத்திற்குரிய ஒரு பகுதியாக பருவநிலை மாற்றம் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நாம் பல தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளோம். இந்தியாவின் சில பகுதிகள் அசாதாரண வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளன. அதேசமயம், வறட்சியை சந்திக்கும் இடங்களும் உள்ளன. இந்த நிகழ்வுகளுக்கு புவி வெப்பமயமாதல் நிகழ்வும் காரணமாகக் கூறப்படுகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்காக உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய நிலைகளில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். இந்தச் சூழலில், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் முன்னெப்போதும் இல்லாத இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணிக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதில் நமது நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கான லைஃப் என்ற தாரக மந்திரத்தை உலக சமூகத்திற்கு வழங்கியுள்ளோம்.
தீவிர வானிலை நிகழ்வுகள் அனைவரையும் பாதிக்கின்றன. ஆனால் அவற்றின் தாக்கம் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீது மிகவும் கடுமையாக உள்ளது. குறிப்பாக நகரங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளை மிகவும் உறுதிமிக்கதாக மாற்றுவது அவசியம்.
நமது வேர்களுக்குத் திரும்புவோம்..!
இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், பேராசை கலாச்சாரம் உலகை இயற்கையிலிருந்து விலக்கி வைக்கிறது. நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை இப்போது உணர்கிறோம். இயற்கைக்கு மிக நெருக்கமாகவும் அதனுடன் இணக்கமாகவும் வாழும் பல பழங்குடிச் சமூகங்கள் இன்னமும் உள்ளன என்பதை நான் அறிவேன். அவற்றின் மதிப்பு மற்றும் வாழ்க்கை முறை பருவநிலை நடவடிக்கைக்கு விலைமதிப்பற்ற படிப்பினைகளை வழங்குகின்றன.
பழங்குடிச் சமூகங்கள் காலம் காலமாக உயிர்வாழும் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லலாம். அந்த ஒற்றைச் சொல் ‘இரக்கவுணர்வு’. இயற்கை அன்னையின் சக குழந்தைகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது அவர்களுக்கு இரக்கம் உள்ளது. இருப்பினும், சில நேரங்களில், உலகம் இரக்கவுணர்வின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால், அத்தகைய காலகட்டங்கள் வெறும் பிறழ்வுகள் மட்டுமே என்றும், கருணையே நமது அடிப்படை இயல்பு என்றும் வரலாறு காட்டுகிறது. பெண்கள் அதிக அளவில் இரக்கவுணர்வு கொண்டுள்ளனர் என்பதும், மனிதகுலம் வழிதவறிச் செல்லும்போது அவர்கள் வழி காட்டுகிறார்கள் என்பதும் எனது அனுபவம்.
அனைவரும் உறுதியேற்போம்…!
நமது நாடு புதிய தீர்மானங்களுடன் ‘அமிர்த காலத்திற்குள்’ நுழைந்துள்ளது, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். தனிமனித மற்றும் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க பாடுபடுவதற்கான நமது அடிப்படைக் கடமையை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம். இதன் மூலம் நாடு தொடர்ந்து முயற்சியிலும், சாதனையிலும் உச்சநிலைகளுக்கு செல்லும்.
நமது அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஆவணம் ஆகும். அதன் முகவுரையில் நமது சுதந்திரப் போராட்ட லட்சியங்கள் உள்ளன. நமது தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களின் கனவுகளை நனவாக்க நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் முன்னேறுவோம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உங்களுக்கு, குறிப்பாக எல்லைகளைப் பாதுகாக்கும் நமது வீரர்களுக்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வழங்கும் படைகளின் வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!