கென்யாவில் சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தேனீக்களைப் பயன்படுத்துகின்றனர் விவசாயிகள். அறுவடை செய்யத் தயாராக இருக்கும் பயிர்களை உணவு தேடி வரும் யானைகளிடமிருந்து காக்கப் பற்பல முயற்சிகளை எடுப்பதே அவர்களின் அன்றாடப் பணியாகிவிட்டது.
வளர்ந்து நிற்கும் பயிர்களை யானைக் கூட்டம் மிக வேகமாக மேய்ந்து பசியைத் தணித்துக் கொள்கிறது. அவற்றை விரட்டப் பல வழிகளைக் கைவசம் வைத்திருக்கின்றனர் விவசாயி கள். தேனீக்களைப் பறக்கவிட்டு யானைகளை வரவிடாமல் தடுப்பது.. யானைகளுக்குப் பிடிக்காத மிளகாய், இஞ்சி, சூரியகாந்தி மலர் முதலியவற் றைப் பயிரிடுவது.
இதனால் யானை களுக்கும் பாதிப்பு இல்லை. மனிதர்களுக்கும் பாதிப்பில்லை, இதற்காக வயலின் வரப்புகளில் தேனீவளர்ப்புப் பண்ணைகள் வைத்து உள்ளனர். யானைகள் அப்பகுதியில் வந்தால் அதன் அதிர்வில் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பறக்கும். இந்த ரீங்கார ஓசை யானைகளுக்குப் பிடிக்காது. ஆகையால் அவ்விடத்தை விட்டு யானைகள் விலகி தூரம் சென்று விடும், இதனால் யானைகளுக்கும் பாதிப்பில்லை, விவசாயமும் பாதிக்காது
உலக நாடுகளில் யானைகள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து வசிக்கும் நபர்கள் அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதும், நவீன அல்ட்ரா சவுண்ட் கருவிகளை வைத்து யானைகளை குழப்புவதுடன் உச்சக்கட்டமாக மின்சார வேலிகள் அமைத்து யானைகளைக் கொல்வது போன்றவற்றை செய்து வருகின்றனர். அவர்களும் கென்ய விவசாயிகளைப் போல் செலவில்லாமல் யானைகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற மாற்றுவழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.