’’மாரிமுத்துவின் மரணம் கூறும் உண்மைகள்’’ என்று மூத்த பத்திரிக்கையாளர் கே.கே.ஆர்.ஆதித்தன், தனது சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
நடிகரும் இயக்குனரும் ஆன மாரிமுத்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் .
அவரது மரணம் திரை உலகை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் அவரை தினசரி இரவு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது .
அவர் நடித்த எதிர்நீச்சல் தொலைக்காட்சி தொடர் தமிழகம் முழுவதும் பெருவாரியான வரவேற்பை பெற்ற தொடராகும்.
அதில் ஒரு குடும்பத் தலைவனாக இருக்கும் அவர்தான் அந்த தொடரின் வில்லனாக சித்தரிக்கப்படுவார் .
அந்த பாத்திரத்துக்கு ஏற்ப அவர் பேசும் வசனங்களும் எப்போதும் தன் மனதை கொதி நிலையிலேயே வைத்திருப்பது போல் அந்த பாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருந்தது .
இதனால் அவர் பேசும் பேச்சுகள் அனைத்துமே எதிர்மறையானதாகவே இருந்து வந்தது.
வழக்கமாக தொலைக்காட்சி தொடர் என்பது வருட கணக்கில் இழுத்தடிக்க கூடிய ஒரு நாடகமாகும்.
அதனால் ஒவ்வொரு பாத்திரமும் ஏதாவது ஒரு வகையில் நீண்ட காலத்திற்கு வருவது போல் சித்தரிக்கப்படும்.
அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் பாத்திரம் வில்லனாக இருந்தாலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதால் அதனை மேலும் மேலும் வளர்த்து சீரமைத்து ஆதி குணசேகரன் பாத்திரம் என்றாலே இப்படித்தான் என்பது போல் ஒரு பிம்பமும் கட்டமைக்கப்பட்டது.
ஆனால், நடிப்புக்கு வெளியேவும் ஆதி குணசேகராக இருந்த நடிகர் மாரிமுத்துவின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் இதுபோன்றுதான் பல தடவை மேடைகளில் கருத்துகள் புரட்சிகரமாக இருந்தாலும் எதிர்மறையானதாகவே இருந்தது.
ஆனால், எழுத்தில் அறம் பாடுவார்கள் என்று முன்பு கூற கேள்விப்பட்டிருக்கிறோம். நான் ஒரு ராசி இல்லா ராஜா என்று பாடிய பிறகு டி.எம்.சௌந்தரராஜன் தனது மார்க்கெட்டை இழந்ததாக கூறுவார்கள்
அதேபோல இந்த தொடரில் நடித்து புகழ் பெற தொடங்கிய பிறகு தனக்காக எழுதப்பட்ட வசனங்களை பேசுவதாலும் காட்சி அமைப்புளில் நடிப்பதாலும் நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் ஆகவே உண்மை வாழ்க்கையிலும் தன்னை நினைக்கத் தொடங்கி விட்டாரோ என்ற அளவுக்கு வெளி மேடைகளில் அவரது கருத்து ஒலிக்க தொடங்கியது .
அதன் விளைவாகத்தானோ என்னவோ அவர் பேசிய வார்த்தைகள் பலித்து அவரை மரணம் கொத்திக் கொண்டு போய்விட்டது.
நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு என்பதை உணர்ந்து கலைஞர்கள் மட்டுமல்ல அவர்களை திரையில் பார்ப்பவர்களும் உணர வேண்டும்.
மக்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக தினமும் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை சித்தரித்து அதை வைத்து மக்களை கவர நினைக்கும் தொலைக்காட்சிகளும் இதனை உணர வேண்டும்.

