’’விவசாயிகள் வேளாண்மைக்கு தேவைப்படும் எந்திரங்களை வாங்குவதற்கு முழு தொகையையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. முழுதொகையில் மானிய தொகையை கழித்து விவசாயிகள் தங்கள் பங்களிப்பு தொகை செலுத்தி எந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்’’ என உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் நோக்கம்:
இன்று வரை விவசாயிகள் வேளாண்மை எந்திரங்களை வாங்குவதற்கு விவசாயிகள் பங்களிப்பு தொகையும், மானிய தொகையையும் சேர்த்து முழு தொகையாக செலுத்த வேண்டியிருந்தது. இதனால் முழு தொகையை வங்கியில் கடனாக பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதோடு மானிய தொகைக்கும் சேர்த்து விவசாயிகள் வட்டி கட்ட வேண்டியிருந்த நிலையில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் மூலம் வேளாண்மை எந்திரமயமாக்கும் நோக்கமும் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.
மானிய தொகையின் விவரங்கள்:
இந்த திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்குவதற்கு ரூ. 85 ஆயிரமும் விசைக்களையெடுப்பான்கள் வாங்குவதற்கு ரூ. 63 ஆயிரமும் மானிய தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிற விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்குவதற்கு ரூ. 70 ஆயிரமும், விசைக்களையெடுப்பான்கள் வாங்குவதற்கு ரூபாய் 50 ஆயிரமும் மானிய தொகையாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
விவசாயிகள் குறிப்பிட்டுள்ள மானிய தொகையை கழித்து மீதமுள்ள தங்களின் பங்களிப்பு தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது விநியோகஸ்தர் அல்லது முகவருக்கு செலுத்தி எந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்யும் முறை:
விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உழவன் செயலியில் உள்ள வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற சேவையில் சென்று வேளாண்மை பொறியியல் துறை – மானிய திட்டங்கள் என்ற துறையில் சென்று தங்களின் விவரங்களை இணைய வழி மூலம் பதிவு செய்தோ அல்லது வரைவோலை மூலமாகவோ மானியத்தில் பவர்டில்லர் மற்றும் விசைக்களையெடுப்பான் வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
– கோ. தீபா புவனேஸ்வரி