தமிழ் திரையுலகிற்கே நடிப்பை கற்றுக்கொடுத்த சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி என்னும் எவரும் அறிந்திடாத இயற்பெயரைக் கொண்ட அனைவராலும் அறியப்பட்ட செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு தினம் ஜுலை 21 இன்று.
சினிமா தொடக்கம்:
முதலில் மேடை நாடகங்களில் நடித்து, பின் 1952 ஆம் ஆண்டில் பி. ஏ. பெருமாள் முதலியார் தயாரிப்பில் “பராசக்தி” என்ற திரைப்படத்தில் நடித்து தன் கால்தடத்தை சினிமாவில் பதித்தார். இவர் நடித்த இந்த முதல் படமே பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது. ‘பராசக்தி’ திரைப்படத்தில் “நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது! புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது! ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல!….” என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நீண்ட வசனத்தை பேசி அனைவரின் நினைவிலும் நிலைத்திருக்கிறார்.
சினிமா பயணம்:
இன்றைய காலத்தில் எண்ணற்ற கதாநாயகர்கள் உள்ளார்கள். ஆனால், அன்றைய காலத்தில் கதாநாயகர்கள் என்றாலே எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்கள் தான் நினைவிற்கு வருவார்கள். தமிழ் சினிமாவில் 250க்கும் மேற்பட்ட படங்களை நடித்த ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நம் சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
1952ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சினிமா பயணம் 1999ஆம் ஆண்டு வரை நீடித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரையுலகிலும் வலம் வந்து தனது முத்திரையை பதித்துள்ளார். மூத்த நடிகர்களுடன் மட்டுமல்லாது இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார்.
காலம் கடந்தும் வாழ்கின்ற திரைப்படங்கள்:
கலைஞனுக்கு தான் அழிவே தவிர கலைக்கு என்றும் அழிவில்லை. நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்தாலும் அவருடைய திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
இவர் தன் முதல் படமான ‘பராசக்தி’ படத்திலேயே நம் அனைவரின் கவனத்தை தன்பால் ஈர்த்துக்கொண்டார். பின் “பணம், மனோகரா, கள்வனின் காதலி, தெனாலி ராமன், அன்னையின் ஆணை, வீரபாண்டிய கட்டபொம்மன், தெய்வ பிறவி, பாசமலர், பலே பாண்டியா, கர்ணன், நவராத்திரி, திருவிளையாடல், கலாட்டா கல்யாணம், வசந்த மாளிகை, ராஜ ராஜ சோழன், தில்லானா மோகனாம்பாள், தேவர் மகன், படையப்பா” போன்ற ஏராளமான படங்கள் காலத்தால் அழிக்க முடியாமல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பயணித்துக் கொண்டிருக்கும்.
மக்களை ரசிக்க வைத்த வசனங்கள்:
இவர் நடித்த படங்களில் வரும் வசனங்கள் பல மக்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்திருக்கிறது. இவரது முதல் படம் “பராசக்தி”யில் “நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது!….” என்ற நீதிமன்ற வசனம் மக்களை பெரிதும் ஈர்த்து சிந்திக்க வைத்தது. “மனோகரா” திரைப்படத்தில் “கட்டளையா இது……” என்ற வசனத்திற்கு உயிர் கொடுத்தார் சிவாஜி கணேசன் அவர்கள். மிகவும் பிரபலமான “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது,……” என்ற “வீரபாண்டிய கட்டபொம்மன்” பட வசனத்தை நாம் மட்டுமல்ல இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் ரசித்து மகிழ்வார்கள். அண்ணன் தங்கை பாசத்தை உணரவைக்கும் “என் கண்ணையே நான் ஒப்படைக்கிறேன்” என்ற “பாசமலர்” வசனம், நகைச்சுவைக்கு “தெனாலிராமன்” பட வசனங்கள் என இவரது பல வசனங்கள் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. ஒரு படத்திற்கு வசனங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வசனங்களுக்கு இவரது குரல் முக்கியம் என உணரும்படி வசனங்களை தந்துள்ளார்.
கதாபாத்திரத்திற்கு உயிற்கொடுத்த கதாநாயகன்:
நடிப்புக்கு உயிர்கொடுத்த நடிகர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவர் எந்த கதாபாத்திரம் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவாராம்!… “வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில் வீர வசனத்திற்கே வீரத்தை கொடுத்தது இவரது நடிப்பு. “கர்ணன்” படம் மூலம் உண்மையில் கர்ணன் இப்படித்தான் இருப்பாரோ என்று நினைக்கும்படி நடித்திருக்கிறார். ஒரு தங்கையை நேசிக்கும் அண்ணனின் உணர்ச்சிகள் எப்படி இருக்கும் என்பதை “பாசமலர்” படம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இது போன்ற இவர் நடித்த அனைத்து படங்களிலும் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே உயிர்கொடுத்துள்ளார்.
புகழ்பெற்ற பாடல்கள்:
இவரது படங்கள், கதாபாத்திரங்கள், வசனங்கள் மட்டுமல்லாது இவர் படங்களில் உள்ள பாடல்களும் மிகவும் பிரபலமாகியுள்ளது. “மலர்ந்தும் மலராத”என்ற “பாசமலர்” பாடல், “உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற “கர்ணன்” பாடல், “யாருக்காக இது யாருக்காக” என்ற “வசந்த மாளிகை” பாடல், “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற “திருவிளையாடல்” பாடல், “நலம் தானா” என்ற “தில்லானா மோகனாம்பாள்” பாடல், “மாமா மாப்ளே” என்ற “பலே பாண்டியா” பாடல் என நூற்றுக்கணக்கான பாடல்கள் அனைத்து வயதினரும் ரசிக்கும் பாடல்களை இவர் நடிப்பு மூலம் நமக்கு பரிசளித்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
விருதுகள்:
இவர் ஏராளமான விருதுகளை தனது சினிமாவின் அர்ப்பணிப்புக்காக பெற்றுள்ளார். “செவாலியர் விருது, பத்ம ஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதா சாஹேப் பால்கே விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருதுகள், கௌரவ டாக்டர் பட்டம், என். டி.ஆர் தேசிய விருது” என பல விருதுகளை பெற்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல், 1962இல் இவர் அமெரிக்கா நாட்டில் சிறப்பு விருந்தினராக சென்றபொழுது, நயாகரா மாநகரின் “ஒரு நாள் நகரத்தந்தை” என்று கௌரவிக்கப்பட்டார்.
இவர் 21ந் தேதி ஜூலை மாதம் 2001 வருடம் மறைந்தார். மறைவு இவரது உடலுக்கு தானே தவிர நடிப்புக்கு அல்ல. இன்னும் எத்தனை காலம் சென்றாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை யாராலும் மறைக்கவும் முடியாது! மறுக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!.
– கோ. தீபா புவனேஸ்வரி

