புதுதில்லியில் நடைபெற்ற 50-வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டத்தில் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் கருத்துகளை வலியுறுத்தினார்.
புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 11.7.2023 அன்று நடைபெற்ற 50-வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது.
எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரிவிதிப்பதற்கான பரிந்துரைகள், தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு முரணாக இந்த பரிந்துரைகள் இருக்கக் கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
மேலும், சரக்குகள் மற்றும் சேவைகள் இணையத்தை, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 – இன் கீழ் சேர்த்து ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டுள்ள 7 ஜூலை 2023 நாளிட்ட அறிவிக்கை வணிகர்களின் நலனுக்கு எதிராகவும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் சட்டமீறல்களை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றும் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாகவும் உள்ளதால், நாடெங்கும் உள்ள வணிகர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதை எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 11-ஆவது மற்றும் 12-ஆவது அட்டவணையில் உள்ள, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளின் செய்கடமைகள் தொடர்பான சேவைகள் மற்றும் 25 விழுக்காடுக்கு பொருட்கள் மிகாத கூட்டு வழங்குகை சேவைகளை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஒன்றிய / மாநில அரசுகள் பெறும்போது தற்போது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் வரிவிலக்கு உள்ளது. இதனை குறிப்பிட்ட சில வரிவிலக்கு இனங்கள் என வரையறுத்து மாற்றியமைக்க உத்தேசித்துள்ள திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இதை எதிர்த்து வருகிறது. எனவே அதனை முற்றிலுமாக கைவிடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மாநில அமர்வுகளுக்கு நியமிக்க வேண்டிய நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை தெரிவு செய்ய மாநில அளவிலான தெரிவு செய்யும் குழுவுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கேன்சர் நோய்க்கான விலை உயர்ந்த மருந்தினை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை குறைப்பதற்கு வரிவிலக்களிக்கும் பரிந்துரைக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவு தெரிவிக்கிறது என்றும்;
குறிப்பிட்ட அரிய வகை நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் உணவுகளை தனிநபர் பயன்பாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்கு விலக்களிக்கும் பரிந்துரைக்கும் தமிழ்நாடு அரசு தனது ஆதரவை தெரிவிப்பதாக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், வணிகவரித் துறை ஆணையர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.