மக்களவை (2024-ம் ஆண்டு) தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் பீகார் தலை நகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் வருகிற 23-ஆம் தேதி கூட்டி உள்ளார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய மேனாள் முதலமைச்சரும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், காஷ்மீர் மேனாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்து, தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் பாட்னாவில் நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசு கையில் மக்களவைக்கு முன்கூட்டியேகூட தேர்தல் வரலாம் என கூறியது பற்றி கேட்கிறீர்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எப்போதுமே இந்த விருப்பம் இருக்கிறது. 2004-ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆதரவாக இல்லாதபோதும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.
இருந்தாலும் நான் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என அப்போது கூறியது வேடிக்கையாகத்தான். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் என்னாவது? இது அவர்களுக்கு பேரிழப்புகளைத் தரும். எனவே அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

