தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் ஆகியோர் அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரின் இறுதி நாளில் 17 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து சட்டமன்றத்தில் எவ்வித விவாதம் இல்லாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதில் மிக முக்கியமான சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023. இந்த சட்டத்தின் மூலம் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களுக்கு 100 ஹெக்டேர் வரை உள்ள நிலங்களில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் உட்பட தனியாரிடம் கொடுப்பதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது.
நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில், அந்த சட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, புதிய திட்டங்களுக்கு விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்தும் போது நியாயமான சட்டப்படியான இழப்பீட்டை பெறுவதற்கே விவசாயிகள் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய நில ஒருங்கிணைப்பு சட்டம் எந்த வகையிலும் ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள நிலங்களை பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திடவும் உதவாது.
மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத்தான் இந்த சட்டம் பயன்படும் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் 17.05.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள், நீரியியல் நிபுணர்கள் இச்சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசின் சார்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை.
இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது, எதிர்வரும் 22.06.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை முற்றிலும் திரும்ப பெற வலியுறுத்தி பெருந்திரள் தர்ணா நடத்துவது என முடிவெடுத்துள்ளது.
எனவே, அனைத்து விவசாய சங்க அமைப்புகளும், பொது நல அமைப்புகளும், நீரியியல் ஆர்வலர்களும் இதில் பங்கேற்று ஆதரவு அளித்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

