இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதாரவி, ஒய்.ஜீ.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஓம் நாராயணன், இசை – விஜய் ஆண்டனி, ஒலிப்பதிவு – எஸ்.சந்திரசேகர், ஒலி வடிவமைப்பு – எஸ்.விஜய்ரத்தினம், கலை இயக்கம் – ஆறுசாமி, மேக்கப் ஸ்டைலிஸ்ட் – ஜி.அனுஷா மீனாட்சி, நடன இயக்கம் – அஸார், ஹரிஹிரன், கல்யாண், சண்டை இயக்கம் – ராஜசேகர், மகேஷ் மாத்யூ, எழுத்து – விஜய் ஆண்டனி, கே.பழனி, பால் ஆண்டனி, பாடல்கள் – அருண் பாரதி, வசனம் – கே.பழனி, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
கதையின் நாயகனாக நடித்துள்ள விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்து இப்படத்தை இயக்கியுள்ளார் .
இந்தப் படத்தை Vijay Antony Film Corporation நிறுவனத்தின் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இந்தியாவின் ஏழாவது பணக்காரராக இருக்கும் குருமூர்த்தியின் ஒரே மகன் விஜய் குருமூர்த்தி என்ற விஜய் ஆண்டனி. இவரது நெருங்கிய நண்பர்கள் அரவிந்த்(தேவ் கில்), இளங்கோ(ஜான் விஜய்) மற்றும் சிவா(ஹரீஷ் பேரடி). இவர்களில் ஹரீஷ் பெரடி விஜய்யின் குடும்ப மருத்துவரும்கூட.
பல வருடங்களாக விஜய்யுடன் இணைந்து பணியாற்றி வரும் அரவிந்துக்கு, விஜய்யின் பணக்காரத்தனம் மீது வெறுப்பு உண்டாகிறது. விஜய்யின் இடத்தில் தான் இருக்க நினைக்கிறார்.
இந்த நேரத்தில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான கிட்டி, மூளை மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து காட்டுகிறார். இதைப் பார்த்த அரவிந்த், விஜய் குருமூர்த்தியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் அவரது சொத்தை அபகரிக்க ஜான் விஜய் மற்றும் ஹரீஷ் பெரடியுடன் இணைந்து திட்டமிடுகிறார். இந்தத் திட்டத்திற்கு மருத்துவர் கிட்டியும் ஒத்துக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் விஜய் ஆண்டனியின் ரத்த குரூப்புக்கு ஏற்ப ஒரு ஆளை தேடுகிறார்கள். அப்படி தேடும்போது கிடைப்பவர்தான் ‘சத்யா’ என்ற இன்னொரு விஜய் ஆண்டனி. இவர் ஒரு பிச்சைக்காரர்.
ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து சிறு வயதிலேயே பிச்சையெடுத்து தன் தங்கையை காப்பாற்றும் விஜய் ஆண்டனி, குழந்தை கடத்தல் கும்பலிடம் சிக்கி தன் தங்கையை தொலைக்கிறார். அதே சதிகார கும்பலால் கஞ்சா விற்றதாக பிடிபட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்.
அங்கிருந்து வெளியில் வந்த சத்யா, தன் தங்கையை கடத்தியவனை கொலை செய்துவிட்டு ஜெயிலில் 10 ஆண்டு தண்டனையடைந்து இப்போதுதான் வெளியில் வந்திருக்கிறார். வந்த வேகத்தில் தன் தங்கையை தேடி அலைகிறார்.
இந்த நேரத்தில்தான் மூளை டொனேஷனுக்காக காத்துக் கொண்டிருந்த அரவிந்த் கும்பலிடம் சத்யா சிக்கிக் கொள்ள, சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்தப்படுகிறார் சத்யா. அங்கே சத்யாவின் மூளை, விஜய் குருமூர்த்திக்கு மாற்றப்படுகிறது. சத்யா கொலை செய்யப்பட்டு துபாய் பாலைவனத்தில் எறியப்படுகிறார்.
இப்போது சத்யாவின் பிச்சைக்காரனுக்குரிய மூளையுடன் விழித்தெழும் விஜய் குருமூர்த்திக்கு, எல்லாமே புதிதாக இருக்கிறது. மூளை மாற்றப்பட்டு வேறொருவரின் உடம்பில் தான் இருப்பதை உணரும் சத்யா, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் செய்கிறார்.
ஆனால் தங்களது செல்வாக்கால் அதை முறியடிக்கிறது அரவிந்த் அண்ட் கோ. இதனால் வெகுண்டெழும் சத்யா, அந்த மூவரையும் கொலை செய்து கடலில் தள்ளிவிட்டு விஜய் குருமூர்த்தியாக அவதரிக்கிறார்.
இப்போது அதே பணத்தை வைத்து ஏழை, எளிய மக்களுக்கு உதவ நினைக்கும் சத்யா, ‘ஆண்டி பிகிலி’ என்ற பெயரில் ஏழ்மையில் கஷ்டப்படும் மக்களுக்காக மிகக் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் வர்த்தகத்தை தொடங்குகிறார்.
இந்நேரத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தினால் நடுக்கடலில் மூழ்குகிறது. கடற்படையினரின் தேடுதல் வேட்டையில் சத்யாவால் கொலை செய்யப்பட்ட அரவிந்த், ஜான் விஜய், டாக்டர் ஹரிஷ் பேராடி ஆகியோரின் கிடைக்கின்றன.
இவர்களின் கொலைகளின் பின்னணியில் சத்யா இருக்கும் தகவலையும், விஜய் குருமூர்த்தியின் பெயரில் இருப்பது பிச்சைக்காரன் சத்யாதான் என்பதையும் அறியும் மாநிலத்தின் முதலமைச்சரான ராதாரவி, இதை வைத்தே சத்யாவை கார்னர் செய்து விஜய் குருமூர்த்தியின் மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார்.
இதற்குப் பின் என்ன நடக்கிறது..? விஜய் ஆண்டனியின் நிலைமை என்ன ஆனது..? அவரது தங்கை கிடைத்தாரா..? இல்லையா..? அவரது ‘ஆண்டி பிக்கிலி’ திட்டம் என்னவானது..? என்பதுதான் இந்தப் ‘பிச்சைக்காரன்-2’ படத்தின் மீதமான திரைக்கதை.
தனது முதல் படத்தில் இருந்து கடைசி படம் வரையிலுமான நடிப்பையே இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. கூடுதலாக இந்தப் படத்தில்தான் எமோஷனல் காட்சிகளில் கதறி, அழது, அரற்றி நடிப்பைக் கொணர்ந்திருக்கிறார்.
தொழிலதிபர் கெட்டப்பில் கெத்தாக வலம் வரும் அதேவேளையில் பிச்சைக்காரன் தோற்றத்திலும், வசன உச்சரிப்பலும், நடிப்பிலும் விஜய் குருமூர்த்தியைத் தாண்டிவிட்டார் ‘பிச்சைக்காரன்’ சத்யா.
ஒரேயொரு டூயட் பாடல் காட்சியில்கூட ரொமான்ஸை எண்ணி, எண்ணி கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அடுத்து வரும் படங்களில் அள்ளிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். ‘ஆண்டி பிக்கிலி’ அறிமுக விழாவில் பேசும் பேச்சிலும், சத்யாவாக தான் வாழும் நிலைமையை எண்ணி குமுறும் காட்சிகளிலும் அவர் அளவுக்கு ஒரு நிஜமான இந்தியனின் மனத்துடிப்பைக் காண்பித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
நாயகியான காவ்யா தாப்பர் டூயட் பாடல் காட்சியில் மொத்தப் படத்திற்கும் தேவையான கவர்ச்சியைக் காட்டியிருக்கிறார். குறைந்த காட்சிகளே வந்திருப்பதால் இவரது நடிப்பு பற்றி அடுத்த படத்தில் விவாதிப்போம்.
தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி மூவரின் வில்லத்தனமும் ரசிக்க வைத்திருக்கிறது, யோகிபாபுவின் டைமிங்கான கவுண்ட்டர் வசனம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. மன்சூர் அலிகானின் நடிப்பு சுவையானது. அந்தக் கேரக்டருக்கே வலு சேர்த்திருக்கிறது.
தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவு சிறப்பு. பாடல் காட்சிகளை படமாக்கியவிதம் அழகு. இசை அதைவிட சிறப்பு. இரண்டு பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. பாடல் வரிகள் முழுமையாகக் கேட்கும் அளவுக்கு வாயசைத்து நடித்திருக்கிறார்கள் நாயகனும், நாயகியும்..!
அந்த அயிட்டம் சாங்கில் ஆடியிருக்கும் நங்கை யார் என்று தெரியவில்லை. துபாய் நேட்டிவிட்டியுடன் அராபிய குதிரைபோல் வாட்ட சாட்டமான உடம்புடன் அவர் ஆடியிகுக்கும் ஆட்டம், இந்தாண்டுக்கான ஸ்பெஷல் டான்ஸ் பட்டியலில் நிச்சயமாக இடம் பெறும்.
ஆனால் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியும் அளவுக்கு சில காட்சிகளை படமாக்கியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. துபாய் காட்சிகள் கிரீன் மேட் என்று தெளிவாகத் தெரியும் அளவுக்கா படம் பிடிப்பார்கள்…? அதேபோல் விஜய் ஆண்டனியின் வீடுகூட கிராபிக்ஸ் என்பதும் தெரிகிறது. கதை, திரைக்கதை, வசனத்தில் இருந்த ஆளுமை, இந்தத் தொழில் நுட்பத்தில் இல்லாமல் போனது ஏன்..?
‘அம்மா’ பாசத்தில் திளைத்து பெரும் வெற்றியைப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ முதல் படத்தைப் போலவே, இதிலும் அண்ணன்-தங்கை பாசத்தைக் காட்டுகிறார் இயக்குநர். ஆனால் பாதியளவே என்பதுதான் பிரச்சினை..!
‘மூளை மாற்று சிகிச்சை’ என்ற புதுமையான ஐடியாவும், அண்ணன் – தங்கை பாசத்தை காட்டியவிதமும் திரையில் அழகாக இருந்தது. பிச்சைக்காரனான சத்யா, விஜய் குருமூர்த்தியாக வெகுண்டெழும் காட்சியெல்லாம் சிறப்பு. இப்படி முதல் பாதியில் நம்மை நெர்வஸாக்கி அமர வைத்திருந்தார் இயக்குநர்.
வர்க்கப் போராட்டம், ஏழை, பணக்காரன் பிளவு, பிச்சைக்காரர்களே இல்லாத தேசத்தை உருவாக்குவோம். ஏழைகளுக்காக பாடுபடுவோம்.. பணக்காரர்களிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சிய பணமெல்லாம் மக்களிடமிருந்து திருடியதுதான் என்று தேச பக்தியை ஊட்ட வேண்டும் என்ற வசனங்களை பொது நல நோக்குடன் பேசியிருக்கும் ‘சத்யா’ என்ற பிச்சைக்காரனின் இந்த எண்ணம் ஏற்புடையதுதான்..!
ஆனால், படத்தின் அடிநாதம் விஜய் குருமூர்த்தியின் சொத்துக்களை அரவிந்த் அண்ட் கோ-விடமிருந்து காப்பாற்றுவதும், திடீர் பணக்காரன் என்ற கோதாவில் காணாமல் போன தனது தங்கையை சத்யா கண்டுபிடிப்பதும்தான். இந்தக் கோணத்திலேயே படத்தைக் கொண்டு போயிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பிச்சைக்காரன்-2 – தங்கை பாசத்தையும் மிஞ்சிய தேச பக்தன்..!