காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடக சட்டசபை தேர்தலில், மாநிலம் தாராளவாதம் கொண்ட, ஜனநாயகரீதியிலான, பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும் கொண்ட முற்போக்கான மாநிலமாக வேண்டுமா அல்லது உள்நோக்கமுள்ள, பெரும்பான்மையான, சகிப்புத்தன்மை இல்லாத, பிற்போக்குத்தனமான மாநிலமாக மாற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், மாநில மக்கள் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.
கர்நாடகத்தின் எதிர்காலத்துக்காக, அங்கு பா.ஜ.க. வெற்றி பெறுவதையும், அந்த வெற்றியின்மூலமாக அதன் அண்டை மாநிலங்களில் அந்தக் கட்சி நுழைவதையும் நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கர்நாடக மாநிலத்தில் கொண்டு வருவதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளதே என்று கேட்கிறீர்கள். அவை இரண்டுக்கும் சமூகத்தைப் பிளவுபடுத்துகிற, சமூக மோதல்களைத் தூண்டி விடுகிற சாத்தியம் உண்டு. சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தது என்று நாம் பார்த்திருக்கிறோம்.
எனவே, கர்நாடக மக்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிரகாரிப்பார்கள் என்றே கருதுகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற பேச்சை பா.ஜ.க. பிரச்சினை ஆக்கி இருக்கிறதே என கேட்கிறீர்கள். பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. வெறுப்புணர்வை பரப்புகிற எல்லா அமைப்புகளையும் காங்கிரஸ் எச்சரித்து இருக்கிறது.
சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கும் என வாக்குறுதி அளித்திருக்கிறது. தவிர, சட்டப்படி ஒரு அமைப்பை தடை செய்வது என்பது நிதித்துறை செயல்பாடு. நாங்கள் சட்டமும், அரசியல் சாசனமும் புனிதமானவை, அவற்றை தனி நபர்களோ, பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் அல்லது இது போன்ற வெறுப்புணர்வைப் பரப்புகிற அமைப்புகளோ மீற முடியாது என்று நம்புகிறோம்.
நாங்கள் தடை விதிப்பது உள்பட சட்டப்படி அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுப்போம். கர்நாடக மாநிலத்தில் நான் குடியிருக்கவில்லை. எனவே அங்கு முழுமையான ஆய்வு நடத்தி, காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என என்னால் கூற இயலாது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துக்கு தேவையான இடங்களைப் பெறும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தோழர்கள் கூறுகிறார்கள்.
தன் மீது அவதூறு வாரி இறைக்கப்படுவதாக பிரதமர் மோடி பிரச்சினை எழுப்பி இருக்கிறாரே என்கிறீர்கள். அவதூறு வாரி இறைப்பது என்றால் என்ன என்பது பார்க்கப்பட வேண்டும். தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் வீசிய அவதூறுகளை எண்ணிப் பார்ப்போமா? இது அர்த்தமற்ற செயல் ஆகும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.