77 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்திய சென்னை, பிளேஆஃப் சுற்றுக்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது.
சிஎஸ்கே கட்டாயமாக வெல்லவேண்டிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதிரடியான தொடக்கத்துக்கு அடித்தளம் போட்டார் கான்வே. அவர் இடக்கை பேட்டர் என்பதால், இரண்டாவது ஓவரிலேயே லலித் யாதவை அழைத்தார் டேவிட் வார்னர். பலனில்லை. ஐபிஎல்-ன் 1000-வது சிக்ஸரை கான்வே இந்த ஓவரில்தான் அடித்தார்.
பிறகு, வலதுகை பேட்டர் ருதுராஜுக்காக அக்ஷர் படேலைக் கொண்டு வந்தார். இந்த ஓவரில் ருதுராஜும் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அழகான ஒரு சிக்ஸர் அடித்தார். இருவரும் டேவிட் வார்னரின் திட்டத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்பது பவர்பிளேயிலேயே தெரிந்தது. 5-வது ஓவரிலேயே சென்னை 50 ரன்களை எடுத்தது.
பவர்பிளேயின் கடைசி ஓவரில் சகாரியா 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். பவர்பிளேயில் பவுண்டரி செல்லாத ஒரே ஓவர் இது. பவர்பிளேவுக்குப் பிறகு, இருவருமே சுழற்பந்துவீச்சுக்குக் கட்டுப்பட்டு நிதானம் காண்பித்தார்கள்.
அக்ஷர் படேல் வீசிய 10-வது ஓவரில்தான் ருதுராஜ் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். நடப்பு ஐபிஎல் பருவத்தின் மூன்றாவது அரை சதத்தை எட்டினார். 10 ஓவர்களில் சென்னை 87 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படைந்தது குல்தீப் யாதவ் வீசிய 12-வது ஓவரில்தான். தொடர்ச்சியாக மூன்று பந்துகளைத் தூக்கி வீசினார். இந்த மூன்று பந்துகளையுமே லாங் ஆன், லாங் ஆஃப், பந்துவீச்சாளர் தலைக்கு மேல் என மூன்று சிக்ஸர்கள் அடித்தார் ருதுராஜ். ருதுராஜ்-கான்வே கூட்டணி 100 ரன்களைத் தாண்டியது.
கான்வே 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதமடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ், சகாரியாவின் குறைவேகப்பந்தில் வீழ்ந்தார். 50 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே இணை 141 ரன்கள் சேர்த்தது. இவர்களது ஆட்டம் அதிரடியாக இருந்தாலும், அபாயகரமான ஷாட்கள் எதுவும் இல்லாமல் டைமிங் மற்றும் இடைவெளிகளைப் பயன்படுத்தி மட்டுமே பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
ஷிவம் துபே களமிறங்கினார். களத்தில் இரு இடக்கை பேட்டர்கள். 2-வது ஓவருக்குப் பிறகு மீண்டும் லலித் யாதவை அழைத்தார் வார்னர். நடப்பு ஐபிஎல் பருவத்தில் சிக்ஸர் அடிப்பதில் கில்லியாக உள்ள துபே, 3-வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். 5-வது பந்தை கான்வே பவுண்டரிக்கு அனுப்பினார்.
கலீல் அஹமது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த துபே, இதே ஓவரில் ஆட்டமிழந்தார். இந்தப் பருவத்தில் மட்டும் அவர் 33 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஷேன் வாட்சன் 35 சிக்ஸர்கள் அடித்ததே, சிஎஸ்கேவுக்காக ஒரு ஐபிஎல் பருவத்தில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள். இந்த சாதனையை துபேவால் இன்றைய ஆட்டத்தில் முறியடிக்க முடியவில்லை.
துபே ஆட்டமிழந்தவுடன் ரஹானே, ஜடேஜா, மொயீன் அலிக்கு முன்பு எம்எஸ் தோனி களமிறங்கினார். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின்போதுதான் கான்வேயால் சதம் அடிக்க முடியவில்லை. இந்த முறை சதத்தைத் தவறவிட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்களுக்கு நோர்கியா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். அனைவரும் தோனியின் சரவெடிக்காகக் காத்திருந்தபோது, பழைய ஜடேஜாவாக மாறி சிக்ஸரும், பவுண்டரிகளுமாக அடித்தார். 19-வது ஓவரில் சென்னை 200 ரன்களைத் தாண்டியது.
ஓப்பீட்டளவில் நன்கு பந்துவீசி வந்த சகாரியா கடைசி ஓவரை வீசினார். இரு பவுண்டரிகளை அடித்தார் ஜடேஜா. பவுண்டரியே அடிக்காத தோனி கடைசிப் பந்தை எதிர்கொண்டார். நோ-பால், ஃப்ரீ ஹிட், வைட் என வாய்ப்புகள் கிடைத்தும், இவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.
சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் விளாசி மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்தது.
பேட்டிங்கில் ருதுராஜ்-கான்வே கூட்டணி அசத்தியதுபோல், பந்துவீச்சில் தீபக் சஹார் – துஷார் தேஷ்பாண்டே இணை நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தது.
இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய பிருத்வி ஷா, தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரில் முழு நீளப் பந்தைப் பயன்படுத்தி நேராக அடிக்கப் பார்த்தார். மிட்-ஆஃபிலிருந்த அம்பதி ராயுடு அட்டகாசமான கேட்ச்சைப் பிடித்தார்.
முதல் நான்கு ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னைப் பந்துவீச்சாளர்கள் இடமளிக்கவில்லை. தில்லி அணி நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தீபக் சஹார் வீசிய 5-வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் வார்னர், சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து இன்னிங்ஸுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், இதே ஓவரில் சால்ட் அவுட் ஆனார். கடந்த ஆட்டத்தில் மிரட்டிய ரூசோவ் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.
பவர்பிளேயை வார்னர் சிக்ஸருடன் நிறைவு செய்ய தில்லி ஆறு ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆட்டத்தின் முடிவை அப்போதே யூகிக்க முடிந்தது.
மற்ற பேட்டர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், வார்னர் மட்டுமே அடித்து விளையாடியதால் ரன்கள் பெரிதளவில் உயரவில்லை. அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். தில்லி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.
கீப்பிங்கில் இருந்த தோனி அறிவுரைகளாக வழங்க, யஷ் துல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.
ஜடேஜாவின் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடினார்கள் வார்னரும் அக்ஷர் படேலும். அக்ஷர் சிக்ஸர் அடித்து ஓவரைத் தொடங்க, வார்னர் பவுண்டரி மற்றும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ஜடேஜா 4 ஓவர்களிலும் கொடுத்த 50 ரன்களில், இந்த ஓவரில் மட்டுமே கொடுக்கப்பட்டது 23 ரன்கள்!